சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

By என். மகேஷ்குமார்

விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் இவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மதியத்துக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியின் போது திறன் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்ததில் ரூ. 371 கோடி முறைகேடு நடந்ததாக தற்போதைய ஜெகன் அரசு குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக சிஐடி போலீஸார் சந்திரபாபு நாயுடுவை கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்து விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுவின் காவல் 2 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இவரது காவல் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை மீண்டும் 5 நாட்கள் வரை விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென சிஐடி போலீஸார் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் வாதம்: அதே வேளையில், சந்திரபாபு நாயுடு மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், ஆளுநரிடம் அனுமதி பெறாமலே,ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டார் என்பதால் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும் என சந்திரபாபு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை மதியத்துக்கு பின்னர் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE