ஊழலில் முன்னிலை வகிக்கும் ராஜஸ்தான்: ஜோத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஜோத்பூர்/ஜபல்பூர்: மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற விழாவில் அங்குள்ள எய்ம்ஸ் வளாகத்தில் 350 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, மாநிலம் முழுவதும் 7 அவசரசிகிச்சை மையங்கள், ஜோத்பூர் விமான நிலைய விரிவாக்கம், ரயில், சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒட்டுமொத்தமாக ரூ.5,000 கோடிமதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இதன் பிறகு அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் ஊழலில் முன்னிலையில் இருக்கிறது. கலவரம், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் ராஜஸ்தான் முன்வரிசையில் உள்ளது. ராஜஸ்தானின் வளங்களை சூறையாடி, ஒட்டுமொத்தமாக மாநிலத்தை அழிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. பாஜகஆட்சி அமைத்தால் வளர்ச்சியில், சுற்றுலா துறையில் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உருவெடுக்கும்.

சிவப்பு டைரி உண்மைகள்: முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர குதாவிடம் உள்ள சிவப்பு டைரியில் காங்கிரஸ் ஆட்சியின் அனைத்து ஊழல் விவகாரங்களும் உள்ளன. அந்த டைரியில்உள்ள உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டுமானால் பாஜகஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ம.பி. வளர்ச்சி திட்டங்கள்: பின்னர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ.12,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். ராணி துர்காவதி நினைவிடம், சாலை, குடிநீர் குழாய் பதிப்பு, ஜல்ஜீவன் திட்டம், இந்தூரில் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை தொடங்கிவைத்தார்.

பின்னர் அதே பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவின் சுதந்திரத்துக்காக ராணி துர்காவதி போராடினார். சுதந்திரத்துக்குப் பிறகு அவரை போன்ற சுதந்திர போராட்ட தலைவர்களை முந்தைய அரசு மறந்துவிட்டது. தற்போதைய பாஜக ஆட்சியில் அவர்களுக்கு நினைவிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவியிருந்தது. அந்த நிலையை பாஜக மாற்றியிருக்கிறது. ஊழலை ஒழித்து வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE