‘எந்தக் கட்சியையும் சிக்கவைப்பது நோக்கம் அல்ல’ - ஆம் ஆத்மி குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை ஏன் குற்றவாளியாக்கவில்லை என்று அமலாக்கத் துறையிடம் புதன்கிழமை கேட்ட கேள்விக்கு, ‘எந்த அரசியல் கட்சியையும் சிக்கவைக்க அப்படி கேட்கவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

இதே வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,"எங்களுடைய கேள்வி ஒரு சட்டபூர்வ கேள்வி. யாரையும் சிக்கவைப்பது அதன் நோக்கம் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். வழக்கின்படி, இந்த ஊழல் மூலமாக ‘ஏ’ பயன் அடைந்தவராக இருந்தால், ‘ஏ’ மீது வழக்கு தொடராமல், ‘பி’ மற்றும் ‘சி’ மீது வழக்கு தொடர முடியுமா? இந்த அடிப்படையில்தான் அந்தக் கேள்வி எழுப்பப்பட்டது” என்று நீதிபதி கண்ணா தெரிவித்தார்.

விசாரணையில் மணீஷ் சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "உச்ச நீதிமன்றத்தின் கேள்வி ஊடகங்களில் திரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இவ்வாறு விளக்கம் அளித்தனர். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிஸ்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, தான் ஊடகங்களிடம் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று மட்டும் கூறியதாக தெரிவித்தார்.

முன்னதாக, புதன்கிழமை இந்த வழக்கு விசாரணையின்போது,"எங்களுக்கு இந்த விவகாரத்தில் விளக்கம் தேவை. பண மோசடி வழக்கினைப் பொறுத்தவரை உங்களின் முழு குற்றசாட்டும் ஓர் அரசியல் கட்சி பலனடைந்ததாக கூறுகிறது. உங்களைப் பொறுத்தவரை அந்தக் கட்சிதான் முழு பயனாளி. ஆனால், இன்னும் அந்தக் கட்சி குற்றவாளியாக்கப்படவில்லை. இதற்கு எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்?” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும் "அவர் (சிசோடியா) இந்த வாதத்தை எழுப்பவில்லை. நாங்கள் நேரடியாக இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கிறோம். நாளை இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ-ஆலும், மார்ச் மாதம் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிந்தால் ஆதாரங்களைக் காட்டுங்கள்: இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி இந்த விவாகரம் குறித்து கூறுகையில், "டெல்லி மதுபான கொள்கை வழக்கில் 15 மாத விசாரணைக்கு பின்னர் அமலாக்கத் துறை இப்போது ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக்கப்போகிறது. இது ஒன்றைத்தான் குறிக்கிறது. அவர்களிடம் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை. இது அவர்களின் பொய்யை மேலும் விரிவாக்கும் நடவடிக்கையே. மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு எதிராக ரூ.1-க்கான ஆதாரத்தையாவது காட்டுமாறு நான் பாஜகவுக்கு சவால் விடுகிறேன். சஞ்சய் சிங் வீட்டில் நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? தங்க கட்டிகள் ஏதாவது கண்டுபிடித்தீர்களா? இதுவரை அவர்களால் ஒரு ஆதாரத்தையும் காட்டமுடியவில்லை இனியும் காட்ட முடியாது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE