‘முக்கிய புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார்’- ஆம் ஆத்மி எம்.பி கைது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கருத்து

By செய்திப்பிரிவு

ராய்பூர்(சத்தீஸ்கர்): மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி., கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், "முக்கியப் புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி., சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், "அரவிந்த் கேஜ்ரிவாலைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். அவரது முகத்தில் பதற்றம் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவரது துணை முதல்வர் சிறையில் இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் சிறையில் இருக்கிறார். ஊழல் இல்லாத இந்தியாவை அமைப்பதாக சொல்லி முன்னணிக்கு வந்தவர்கள், இப்போது ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முக்கியமான புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார். அவருக்கான நேரம் விரைவில் வரும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் நற்சான்று வழங்கியவர்கள் எல்லோரும் ஓராண்டாக சிறையில் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் சஞ்சய் சிங்கின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சஞ்சய் சிங்கின் கைது முற்றிலும் சட்டவிரோதமானது. இது மோடியின் பதற்றத்தினையே காட்டுகிறது. தேர்தல் வரை அவர்கள் (பாஜக) இன்னும் நிறைய பேரை கைது செய்வார்கள்"என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்பி கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஜா கூறுகையில், சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படவில்லை. மாறாக அவர் இ.டி- ஐ.டி -சிபிஐ ஆகியவை அடங்கிய பாஜவின் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இருண்ட காலம் தொடங்கியிருக்கிறது. இது சர்வாதிகாரிகளின் காலம். பயந்தவன் சாவான். சர்வாதிகாரிகளும் அவர்களுக்குள் பயப்படுகிறார்கள். அந்த பயத்துக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சஞ்சய் சிங்-ன் கைதைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகங்களின் முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE