சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு; தீஸ்தா நதியில் வெள்ளம் 40 பேர் உயிரிழப்பு - 23 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேரை காணவில்லை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். கரையோரத்தில் இருந்த ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்டது. 23 ராணுவ வீர்கள் உட்பட 120 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வடக்கு சிக்கிம் பகுதியில், நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்தில் பாயும் தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள சங்தங் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தீஸ்தா நதியில் நேற்றுஅதிகாலை 1.30 மணி அளவில் நீர்மட்டம்20 அடி உயரத்துக்கு திடீரென உயர்ந்தது. இதனால், லச்சன் பள்ளத்தாக்கு பகுதியில், தீஸ்தா நதியின் குறுக்கே உள்ள நடைபாலம், சிக்கிம் - மேற்குவங்கத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் உட்பட 120 பேரை காணவில்லை. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் சேற்றில்மூழ்கின.

சிங்தம் உட்பட பல்வேறு பகுதிகளில்40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நேற்று இரவு தெரிவித்தனர். ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியை முதல்வர் பிரேம் சிங் தமாங் பார்வையிட்டார். அவர் கூறியபோது, ‘‘திடீர் வெள்ளப் பெருக்கால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. சிங்தம் பகுதியில் பலரை காணவில்லை. இங்கு தேடுதல், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன’’ என்றார். தீஸ்தா நதி கரைபுரண்டு ஓடுவதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சிக்கிம் மாநில நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘சிக்கிம் மாநிலத்தில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ள இயற்கை சீற்ற நிலவரம் குறித்து முதல்வர் பிரேம்சிங் தமாங்கிடம் கேட்டறிந்தேன். அனைத்துஉதவிகளும் அளிப்பதாக உறுதி அளித்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள செய்தியில், ‘கனமழை காரணமாக சிக்கிம் சங்தங் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் கஜோல்தோபா, தோமாஹனி, மெகாலிகஞ்ச் மற்றும் கிஷ் போன்ற தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மற்றும் கலிம்பாங் நிர்வாகமும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE