உ.பி. சுகாதார தரவரிசை: வாரணாசி முதலிடம் - தமிழரான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு குவியும் பாராட்டு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடம் பெற்றுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம்.ஐஏஎஸ் தான் இதற்குக் காரணம் என தமிழரான அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பாஜக ஆளும் உ.பி.யில் ஒவ்வொரு வருடமும் அதன் மாவட்டங்களின் சுகாதார தரவரிசை பட்டியலிடப்படுகிறது. இம்மாநிலத்தின் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நிலைகளில் ஆய்வுசெய்து இந்த தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வருடம் வெளியான சுகாதார மாவட்டங்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில், 85 சதவிகிதம் சிறந்த சுகாதார செயல்பாடுகளை கொண்டதாக வாரணாசி விளங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியின் ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம்,ஐஏஎஸ் தமிழர் இருந்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவியத் துவங்கி உள்ளன.

கடந்த வருடமும் உபியின் சிறந்த சுகாதார மாவட்டங்கள் தரவரிசை பட்டியலில் வாரணாசி முதல் இடம் பெற்றிருந்தது. திருநெல்வேலியின் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பெற்று உ.பி மாநில அதிகாரியானவர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வாரணாசி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர்.சந்தீப் சவுத்ரி கூறும்போது, ‘இம்மாவட்டவாசிகளின் மருத்துவ நலம் காப்பதில் தொடர்ந்து நம் ஆட்சியர் ராஜலிங்கத்தின் ஆலோசனை பெற்று செய்து வருகிறோம்.

குறிப்பாக இதில் கருவுறும் பெண்கள் மீதான எச்ஐவி பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகளை அளிப்பதில் 100 சதவீதம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலவற்றில் இரண்டாவது நிலையையும் நமது மாவட்டம் பெற்றுள்ளது.

இதற்கு நமது ஆட்சியர் நேரம் ஒதுக்கி ஆலோசனை அளித்ததுடன் உடனுக்குடன் நம் தேவைகளைப் பூர்த்தி செய்து உற்சாகப்படுத்தி வருவதும் முக்கியக் காரணம்.’ எனத் தெரிவித்தார்.

இலவச கண்புரை அறுவை சிகிச்சை தனது தொகுதியான வாரணாசியில் எவருக்கும் பார்வையில் கண்புரை இருக்கக் கூடாது என பிரதமர் விரும்பியுள்ளார். இவரது விருப்பத்தை நிறைவேற்ற உபியின் புந்தேல்கண்ட் பகுதியிலுள்ள சித்ரகுட்டின் ஸ்ரீசத்குரு சேவா சங் அறக்கட்டளையின் மருத்துவமனை முன்வந்தது.

இவர்களது மருத்துவர்கள் குழு, வாரணாசியின் அறுபது வயதிற்கும் சுமார் எழுபதாயிரம் பேர்களின் கண்களை இதுவரை பரிசோதனை செய்துள்ளது. இதில் கண்புரை உள்ளவர்களுக்கு சித்ரகுட் அழைத்துச் சென்று அங்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்காக அவர்களை அழைத்துச்சென்று திரும்பி கொண்டுவந்து விடுவது வரை பயணச்செலவையும் இந்த அறக்கட்டளை மருத்துவமனையே ஏற்கிறது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வாரணாசியின் ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, "வாரணாசிவாசிகளில் கண்புரை விழிப்புணர்வு இல்லாதவர் உள்ளிட்ட அனைவருக்கும் படிப்படியாக கண் பரிசோதனை செய்து குளிர்காலங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரையும் சிகிச்சை பெற்ற சுமார் 5,000 பேர்களில் சிலரை அழைத்து பிரதமர் தனது சமீபத்திய வாரணாசி விஜயத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த நோயானது அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்புள்ளது என்றாலும், இன்னும் 2 வருடங்களில் வாராணாசியில் கண்புரையுடன் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்பது பிரதமரின் நோக்கமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நாம் சுகாதாரம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE