என்ஐஏ-யால் தேடப்பட்டு வரும் 3 முக்கிய தீவிரவாதிகள் டெல்லியில் கைது: 2 பேர் பொறியியல் பட்டதாரிகள், ஒருவர் பிஎச்டி படித்தவர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தீவிரமாக தேடப்பட்டு வந்த 3 முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி, உ.பி. மாநிலங்களில் நேற்று போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பொறியியல் பட்டப்படிப்பை படித்தவர்கள். ஐஎஸ்எஸ் இயக்கத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இவர்களை தீவிரமாக தேடிவந்தது. இவர்கள் அனைவரும், வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் மூவரில் ஒருவர் பிஎச்டி படிப்பை முடித்தவர் என்று தெரிய வந்துள்ளது.

இவர்களில் ஷாநவாஸ் என்பவர் என்ஐஏவின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர். இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் மூத்த அதிகாரி எச்ஜிஎஸ் தலிவால் கூறியதாவது: தீவிரவாத சந்தேக நபர்களில் மிக முக்கியமானவர் ஷாநவாஸ். இவரது கூட்டாளிகளான முகமது ரிஸ்வான் அஷ்ரப் லக்னோவில் இருந்தும், முகமது அர்ஷத் வர்சி உத்தர பிரதேசத்தின் மொரதாபாத்திலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரையும் பற்றி தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என என்ஐஏ கடந்த மாதமே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

டெல்லியில் ஷாநவாஸ் பதுங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், ரசாயனங்கள், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஜிகாதி இலக்கிய புத்தகங்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஐஎஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நன்கு தெரிந்தவர்களை குறிவைத்து தாக்கி அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு தலிவால் கூறினார்.

ஷாநவாஸ் உள்ளிட்ட கைதான மூன்று பேரும் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்எஸ்அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் வழக்கமான அடிப்படையில் தகவல்களை அந்த அமைப்புடன் பகிர்ந்து வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே வழங்க அந்த அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் வெளிப்புற பங்களிப்பு என்பது எந்த இடத்திலும் வெளிப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கை சேர்ந்தவர் ஷாநவாஸ். சுரங்கப் பொறியாளர் என்பதால் அவருக்கு குண்டுவெடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்துள்ளது. அவரது மனைவி பிறப்பால் இந்துவாக இருந்து திருமணத்துக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்.

அதேபோன்று, முகமது அர்ஷத்வர்சியும் ஜார்க்கண்ட் மாநிலத்தைசேர்ந்தவர். அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிடெக் முடித்துள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் முனைவர் (பிஎச்டி) பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

முகமது ரிஸ்வான் அஷ்ரப் என்பவர் கணினி அறிவியலில் பிடெக் படித்தவர். உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கரைச் சேர்ந்த இவர் மதகுருவாகவும் பயிற்சி பெற்றவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE