தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில்: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் (ஸ்லீப்பர் கோச்) கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது: ரயில்வே திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி ரயில்வே உள்கட்டமைப்பு உருவாக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மூலதன செலவினத்தில் இது 58 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2024-25-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களுக்கான அனைத்து முன்தயாரிப்பு பணிகளையும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள்ளாகவே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தஆண்டு பிப்ரவரி மாதத்தில் தூங்கும் வசதி பெட்டிகளுடன் கூடியவந்தேபாரத் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தூங்கும் பெட்டிகளின் உட்புற வடிவமைப்பு படிப்படியாக இறுதி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையின் தேவைகளை கருத்தில் கொண்டு தூங்குவதற்கு போதுமான இடம் மற்றும் மேல் படுக்கையை பெறுபவர்களுக்கு வசதியான படிக்கட்டு வடிவமைப்பு பணிகள் ஆகியவை பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 857 படுக்கைகள் கொண்ட வந்தே பாரத் தூங்கும் வசதி ரயிலின் முதல் பதிப்பு சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரயில் பயணிகளுக்காக 823 படுக்கைகளும், ஊழியர்களுக்காக 34 படுக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு கழிப்பறைகளுக்குப் பதிலாக மூன்று கழிப்பறைகள் மற்றும் ஒரு மினி ‘பேன்ட்ரி’ இருக்கும்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஇஎம்எல் இதுபோன்ற 10 ரயில்களை ஐசிஎஃப்-க்காக தயாரித்து வருகிறது. தற்போது இயக்கப்பட்டு வரும் 34 வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வரும் பிப்ரவரி முதல் நெடுந்தொலைவில் பயணிப்பவர்களுக்கு தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டியும் வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாக உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE