தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி: நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் நடைபெற்றது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காந்தி ஜெயந்தியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் நேற்று தூய்மைப் பணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம் இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு தழுவியதூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதையேற்று நாடு முழுவதும் மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 9.2 லட்சம் இடங்களில் நேற்று தூய்மைப் பணிநடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணாவை சேர்ந்தமல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோவை அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 4 நிமிடங்கள் 41 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிரதமர் மோடியும் மல்யுத்த வீரர் அங்கித்தும் ஒரு தோட்டத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். துடைப்பத்தால் குப்பைகளை பெருக்கிக் கொண்டே இருவரும் சுவாரசியமாக உரையாடினர்.

மோடி: உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள். தூய்மைப் பணிக்காக என்ன செய்கிறீர்கள்?

அங்கித்: சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது நமதுகடமை. நாம் வசிக்கும் பகுதி தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மோடி: ஹரியாணாவின் சோனிபட்டில் தூய்மை இயக்கம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

அங்கித்: தூய்மை பணியில் பொதுமக்கள் இப்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மோடி: ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள்?

அங்கித்: 4 முதல் 5 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்கிறேன். நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து ஊக்கம் பெறுகிறேன்.

மோடி: நான் அதிக உடற்பயிற்சிகளை செய்யவில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான அளவுக்கு மட்டுமே உடற்பயிற்சி செய்கிறேன். ஆனால்ஒழுக்கம், கட்டுப்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுகிறேன். குறிப்பாக உணவு பழக்க வழக்கம், தூங்கும் நேரத்தில் கவனம் செலுத்துகிறேன். எனினும் தூங்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது.

அங்கித்: நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க நீங்கள் விழித்திருக்கிறீர்கள்.

மோடி: சமூக வலைதளத்தை நீங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறீர்கள். உங்களதுவழிகாட்டுதலால் ஏராளமான இளைஞர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்குசெல்ல தொடங்கியுள்ளனர். ஒருஇளம்பெண், தனது தாயின் உடற்பயிற்சிக் கூடம் என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அந்த பெண்ணின் தாய் துணிகளை துவைப்பது, வீட்டு வேலைகள் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது பயனுள்ள பதிவு.

அங்கித்: உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு பூர்த்தியாகி உள்ளது.ஜி-20 மாநாட்டால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றனர்.

மோடி: ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்ற பாரத மண்டபத்தில் சுவர் முழுவதும் யோகாசனங்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு ஆசன படத்துடன் கியூஆர் கோடும் அச்சிடப்பட்டிருந்தது. இதன்மூலம் ஆசனத்தை எவ்வாறு செய்வது அதன் பலன்கள் என்ன என்பதை மாநாட்டில் பங்கேற்றோர் அறிந்து கொண்டனர்.

அங்கித்: விளையாட்டு துறை முன்னேற்றத்துக்கு நீங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அதோடு கட்டுடல் இந்தியா இயக்கத்தை தொடங்கி நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருவதை பாராட்டுகிறேன்.

மோடி: 75 நாட்கள் சவால் என்ற இயக்கத்தை நீங்கள் சமூகவலைதளத்தில் தொடங்கியது ஏன்?

அங்கித்: மக்களின் உடல்நலனை பேண இந்த இயக்கத்தை தொடங்கினேன். இதற்கு5 விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஒரு நாளில் இருமுறை உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு புத்தகத்தில் 10 பக்கங்களை படிக்க வேண்டும். நாள்தோறும் ஒரு செல்பியை பதிவு செய்யவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.

மோடி: நீங்கள் நல்ல பணியை மேற்கொண்டு வருவதை பாராட்டுகிறேன்.

யார் இந்த அங்கித்? மல்யுத்த வீரரும் பிட்னஸ் பயிற்சியாளருமான அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இருவரின் உரையாடல் மூலம் நாட்டு மக்கள் தூய்மை பணிகளில் மட்டுமன்றி உடல் நலனினும் அக்கறை செலுத்தவேண்டும் என்பது உணர்த்தப்பட்டு உள்ளது.

ஹரியாணாவின் சோனிபட் பகுதியை சேர்ந்த அங்கித் மல்யுத்த வீரர் ஆவார். சமூக வலைதளங்கள் வாயிலாக உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மக்களிடம் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் சமூக வலைதளத்தில் 75 நாட்கள் சவால் என்ற இயக்கத்தை தொடங்கினார். இதன்படி 75 நாட்கள் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மன நலனை பாதுகாக்க நாள்தோறும் பகவத் கீதையை படிக்க வேண்டும். தியானம் செய்ய வேண்டும் என்றும் அவர்அறிவுரைகளை வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

அமித் ஷா தூய்மைப் பணி: மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சீதாபூரிலும், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அகமதாபாத்திலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

ராணுவம், கடற்படை, விமானப் படை அதிகாரிகள், வீரர்கள், மத்திய அரசின் அனைத்து துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் அவரவர் பகுதிகளில் தூய்மைப் பணியைமேற்கொண்டனர்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஹரியாணாவில் குருகிராமில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். அவர் கூறும்போது, “வந்தே பாரத்ரயிலை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் நடைமுறையை வெற்றிகரமாக அமல் செய்துள்ளோம். முதல்கட்டமாக நாட்டின் 35 ரயில் நிலையங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE