புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை கடற்கரைப் பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இது குறித்து கடந்த 24-ம் தேதி ஒலிபரப்பான 105-வது `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை இயக்கம் வேகம் பெற்றிருக்கிறது. `மனதின் குரல்' வாயிலாக நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்.
உங்கள் தெருவில், அக்கம்பக்கத்தில், பூங்காவில், நதியில், குளத்தில், ஏரியில் அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் நடைபெறும் தூய்மை இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் அமுத நீர்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்த தூய்மை இயக்கமே, காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி" என்று தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன. குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைகளில் கிடைந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஹரியானாவின் குருகிராம் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்கள் அணியும் சீருடையை அணிந்து கொண்டு குப்பைகளைப் பெருக்கி வீதியை அவர் சுத்தம் செய்தார்.
» “காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை” - பிரதமர் மோடி
» பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ம.பி. சிறுமியின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்ற காவல் அதிகாரி!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், சீதாபூர் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். அவரோடு இணைந்து ஏராளமானோர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். மும்பையில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்தார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுதந்திர தின உரையில் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஏராளமான மக்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இது ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது" என கூறினார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், டெல்லியின் சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, உத்தண்டி, நயினார்குப்பம் மீனவ கிராம மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி தொடங்கிய தேசிய அளவிலான தூய்மை சேவை என்ற சமூகம் முன்னெடுக்கும் தூய்மை பிரசார இயக்கத்தில் பங்கெடுத்தார். இதனையடுத்து, ஆளுநர் ரவி தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி, சமூக சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டினார்.
இந்த முன்னெடுப்பு குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறும்போது, "நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நகரங்கள், கிராமங்களில் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ் அதிக குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்கள், நீர்நிலைகள், குளம், நதிக்கரைகள், குடிசை மாற்று வாரியப் பகுதிகள், பாலங்களின் கீழ் பகுதிகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், உயிரியல் பூங்காக்கள், கோ சாலைகள், மலை, கடலோரங்கள், துறைமுகங்கள், குடியிருப்புப் பகுதிகள், அங்கன்வாடிகள், பள்ளி, கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் தூய்மைப் பணி நடைபெறும்" என தெரிவித்திருந்தார்.
முப்படைகள் பங்கேற்பு: இந்தப் பணியில் ஈடுபட நகர்ப்புறங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்கங்கள் முன்வந்துள்ளன. கிராமங்களிலும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மார்க்கெட் சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், தனியார் துறையினர் என பல்வேறு தரப்பினரும் தூய்மைப் பணியில் ஈடுபட முன்வந்துள்ளனர். முதல்முறையாக ராணுவம், கப்பல் படை, விமானப் படையினரும் மக்களுடன் ஒன்றிணைகின்றனர். அவர்கள் ரயில் தண்டவாளங்கள், பாரம்பரியக் கட்டிடங்கள், கோட்டைப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும், பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் உள்ளூர் சமூக மக்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர, அப்ரோஸ் ஷா, சுதர்சன்பட்நாயக் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். பொதுக் கழிப்பிடங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ள சுலப் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago