கவனத்தை திசைதிருப்பும் ஆயுதமானது சமூக ஊடகம்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

By செய்திப்பிரிவு

கோவா: கோவா மாநிலத்தின் மர்மகோவா பகுதியில் உள்ள ஜி.ஆர்.காரே சட்டக் கல்லூரியில் ‘ஜிஆர்கே - சட்ட பேச்சுகள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை நீதிபதி மகேஷ் சோனக் பேசியதாவது: நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களை போற்றும் யுகத்தில் வாழ்கிறோம். ஆனால், சிந்திக்க முயற்சிக்கும் மனிதர்களை பற்றி சந்தேகப்படுகிறோம் அல்லது எச்சரிக்கையாக இருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவுக்கு சில சிறப்புகள் உள்ளன. இயந்திரங்களும், கணிப்பு நெறிமுறைகளும் எவ்வளவு புத்திசாலித்தன மாகவும் இருக்கட்டும். ஆனால், நாம் நமது சிந்திக்கும் திறனையும், விவேகமாக செயல்படும் திறனை யும் அவற்றுக்கு அடமானம் வைத்தால், அது சோகமான நாளாகவும், சோகமான உலகமாகவும் இருக்கும்.

மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் வித்தியாசம் இல்லை என்பதால் நாம் நமது சிந்தனைத் திறனைக் குறைத்துக் கொள்ளவிரும்பக் கூடாது. மனித இனம் மனித நேயத்தை கொள்ளையடிப்பதை நாம் அனுமதிக்க முடியாது, அல்லது அனுமதிக்க கூடாது.

தெளிவாகவும், சுயமாகவும், அச்சம் இன்றியும் சிந்திக்கும் திறன், ஒரு மாணவனை ஆராய்ந்து, பகுத்தறிந்து, தேவைப்பட்டால் சக்திவாய்ந்ததாக உருவாகிவரும் சமூக ஊடகங்கள் தொடர்ந்து திணிக்கும் கருத்துகளை நிராகரிக்க வைக்கும். பல ஆண்டுகளுக்கு முன், உலகம் பேரழிவு ஆயுதங்களுக்கு எதிராக போராடியது. ஆனால், தற்போது சமூக ஊடகம், மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஆயுதங்களாக மாறிவிட்டன. ஆனாலும், அதை தடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் இல்லை.

நான் சுமார் 4 ஆண்டுகளாக செய்தியை அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன். செய்திகளை படிக்கவில்லையென்றால், பல விஷயங்களில் நான் தகவல் அறியாதவனாக உணர்கிறேன். ஆனால், தவறான தகவல்களை அறிவதைவிட, படிக்காமல் இருப்பது சிறந்தது என நான் கருதுகிறேன். எனவே, தேர்வு என்பது அறியப்படாத, தவறான தகவல்களுக்கு இடையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE