பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று 6.40 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று நடைபெறும் தூய்மைப் பணிக்காக 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி ஒலிபரப்பான 105-வது `மனதின் குரல்' நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடிசுட்டிக் காட்டினார்.

அவர் பேசியபோது, “காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை இயக்கம் வேகம் பெற்றிருக்கிறது. `மனதின் குரல்' வாயிலாக நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்.

உங்கள் தெருவில், அக்கம்பக்கத்தில், பூங்காவில், நதியில், குளத்தில், ஏரியில் அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் நடைபெறும் தூய்மை இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் அமுத நீர்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்த தூய்மை இயக்கமே, காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி" என்று தெரிவித்தார்.

இதை நினைவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் `எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அக். 1-ம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் அனைவரும் அவரவர் பகுதியில்ஒன்றுகூட வேண்டும். தூய்மையான எதிர்காலத்தை உருவாக்கும் உன்னத முயற்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 10 மணிக்கு தூய்மைப் பணி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். ‘சிரமதானம்’ (உடல் உழைப்பை தானமாக அளித்து, நாட்டின் தூய்மைப் பணியில் ஈடுபடுவது) என்ற பெயரில் நடைபெறும் இந்த தூய்மைப் பணி குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நகரங்கள், கிராமங்களில் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ் அதிக குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்கள், நீர்நிலைகள், குளம், நதிக்கரைகள், குடிசை மாற்று வாரியப் பகுதிகள், பாலங்களின் கீழ் பகுதிகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், உயிரியல் பூங்காக்கள், கோ சாலைகள், மலை, கடலோரங்கள், துறைமுகங்கள், குடியிருப்புப் பகுதிகள், அங்கன்வாடிகள், பள்ளி, கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் இன்று தூய்மைப் பணி நடைபெறுகிறது.

முப்படைகள் பங்கேற்பு: இந்தப் பணியில் ஈடுபட நகர்ப்புறங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்கங்கள் முன்வந்துள்ளன. கிராமங்களிலும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மார்க்கெட் சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், தனியார் துறையினர் என பல்வேறு தரப்பினரும் தூய்மைப் பணியில் ஈடுபட முன்வந்துள்ளனர்.

முதல்முறையாக ராணுவம், கப்பல் படை, விமானப் படையினரும் மக்களுடன் ஒன்றிணைகின்றனர். அவர்கள் ரயில் தண்டவாளங்கள், பாரம்பரியக் கட்டிடங்கள், கோட்டைப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

மேலும், பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் உள்ளூர் சமூக மக்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர, அப்ரோஸ் ஷா, சுதர்சன்பட்நாயக் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். பொதுக் கழிப்பிடங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ள சுலப் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது.

போட்டிகள் நடத்தக் கூடாது: தூய்மை இயக்கத்தின்போது தனியார் அமைப்புகள் சுவர் ஓவியம், ரங்கோலி கோலம், விழிப்புணர்வு ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்தக்கூடாது. தூய்மைப் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி தொடங்கிவைத்த தூய்மை இந்தியா திட்டம், தற்போது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இயக்கம் தொடர்பாக மத்திய கேபினட் செயலர், மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதன்படி, மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூய்மை இயக்கத்தை முன்னின்று நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்