புரட்டாசி சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசிக்க வந்து திருமலையில் 5 கி.மீ. வரை காத்திருக்கும் பக்தர்கள்

By என். மகேஷ்குமார்

திருமலை: புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் புரட்டாசி முதல் நாளில் தொடங்கியது. கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 9 நாட்கள் வரை பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புரட்டாசி மாதத்தில் வந்த இந்த பிரம்மோற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலவரையும், உற்சவர்களையும் தரிசனம் செய்தனர். வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு படை எடுத்து வந்தனர்.

இதனால் அலிபிரி வாகன சோதனைச் சாவடியிலேயே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.

திருமலையில் சர்வ தரிசனம் செய்ய வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் நேற்று பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுவாமியை தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 2,500 ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் உணவு, தண்ணீர் போன்றவற்றை 24 மணி நேரமும் விநியோகம் செய்து வருகின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாத விநியோக மையம் மற்றும் இலவச அன்ன பிரசாத மையத்திலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE