திரைப்பட தணிக்கைக்கு லஞ்சம் பெற்ற விவகாரம்: விஷால் குற்றச்சாட்டுக்கு சென்சார் போர்டு பதில்

By செய்திப்பிரிவு

மும்பை: மார்க் ஆண்டனி படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால், அண்மையில் சென்சார் போர்டு மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் அளித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஊழலை அறவே சகித்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்சார் போர்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

“திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் சில பகுதிகளில் முகவர்கள்/தனிநபர்களின் துணையை நாடும் வழக்கம் உள்ளது. இது தணிக்கை சான்றிதழ் சார்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாட்டினை வீழ்த்த காரணமாகிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தவிர்க்க முடியாத காரணங்களால் விரைந்து சான்றிதழ் தேவைப்படுபவர்கள் வாரியத்தின் உயர் அதிகாரிகளை கடிதம் மூலம் அணுகலாம்” என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் விஷால் கடந்த வியாழன் அன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை திரையிடலுக்கு ரூ.3.5 லட்சம் மற்றும் சென்சார் சான்றிதழுக்கு ரூ.3 லட்சம் என இரு தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏகநாத் ஷிண்டே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விஷாலின் இந்தப் புகாருக்கு எக்ஸ் தளத்தில், வெள்ளிக்கிழமை (செப். 29) பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தது. விஷால் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார். அதோடு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE