குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார் - மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமானது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக இம்மாதம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இம்மசோதா கடந்த 19-ம் தேதியும் மாநிலங்களவையில் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இதற்கு ஆதரவாக 454 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்.பி.க்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். முஸ்லிம் பெண்கள் மற்றும் ஓபிசி பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அக்கட்சி காரணம் கூறியது. காங்கிரஸ் கட்சியும் ஓபிசி பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டை வலியுறுத்தியது.

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் 2024 மக்களவைத் தேர்தலிலேயே இதனை அமல்படுத்த வலியுறுத்தினர்.

இதையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, கடந்த 21-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 215 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறியதை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாறியது. இதனை மத்திய அரசு தனது அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் ஆகும் என்பதால் 2029 தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இம்மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. 2010-ல் இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்