5 மாநில தேர்தலில் அதிக எம்.பி.க்களை களமிறக்க பாஜக முடிவு: முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்த வாய்ப்பில்லை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படும் இத்தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. 5 மாநிலங்களில் ம.பி.யில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. மிசோரமில் ஆளும் மிசோரம் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக உள்ளது.

இதனால் நான்கு மாநிலங்களிலும் வெற்றிபெற்று ஆட்சிஅமைக்க பாஜக பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதில், முக்கியமாக தனது எம்.பி.க்களையே அதிக எண்ணிக்கையில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த வகையில், ம.பி.யில் 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சத்தீஸ்கரின் 90 சட்டப்பேரவை தொகுதிகளின் பலவற்றிலும் தனது மாநில தலைவரான அருண் சாவ் உள்ளிட்ட பல எம்.பி.க்களை களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளது.

அர்ஜுன்ராம் மேக்வால்: ராஜஸ்தானிலும் தனது பல எம்.பி.க்களை வேட்பாளர்களாக்க பாஜக திட்டமிடுகிறது. இந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன்ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இத்தனைக்கும் ராஜஸ்தானில் ஒரு கட்சியின் ஆட்சி இரண்டாவது முறையாக தொடராத நிலை பல ஆண்டுகளாக உள்ளது. இருப்பினும் பாஜக சுணக்கம் காட்டாமல் வெற்றிக்கான தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தெலங்கானாவில் பாஜகவிற்கு4 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்ட அனைவரையும் சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எம்.பி.க்களுக்கு உள்ளதேசிய செல்வாக்கு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரும் என்பது பாஜகவின் அரசியல்கணக்காக உள்ளது. இம்மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களையும் நிறுத்த பாஜக திட்டமிடுகிறது.

பொதுவாக எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் எம்எல்ஏக்கள் மீது வாக்காளர்களுக்கு அதிருப்திஏற்படுவது உண்டு. இதனால், அவர்களை தவிர்த்து புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் வெற்றியைத் தரும் என்பதும் பாஜகவின் எதிர்பார்ப்பாகி விட்டது. சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது பாஜகவின் வழக்கமாக இருந்தது. இந்தமுறை அக்கட்சியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக, அதிக செல்வாக்குடன் வெற்றிபெறும் எம்.பி. அல்லது தேசியத் தலைவரை தேர்தல் முடிவுக்குப் பிறகுமுதல்வராக தேர்வு செய்யும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு விட்டது. இதன்மூலம், மாநிலங்களில் அதிருப்தி தலைவர்களை சமாளிக்க முடியும் எனவும் பாஜக நம்புகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE