நாடாளுமன்றத்தில் வெறுப்புப் பேச்சு: எம்.பி ரமேஷ் பிதுரியை விசாரிக்க பாஜக பரிந்துரையால் சிறப்புரிமைக் குழு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு குழுவை அமைக்க பாஜகவும் பரிந்துரை செய்துள்ளது எனத் தெரிகிறது.

பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, 14 பேர் கொண்ட சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுனில் குமார் சிங் உட்பட 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். "வெறுப்பு பேச்சு தொடர்பான அனைத்து புகார்களையும் சிறப்புரிமைக் குழு ஆய்வு செய்யும்" என்று மக்களவை செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி, நாடாளுமன்றத்தில் சக உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்தை பேசி இருந்தார். நாடாளுமன்றத்தில் சந்திரயான்-3 குறித்து விவாதித்தபோது டேனிஷ் அலியை ரமேஷ் பிதுரி சாடியிருந்தார். ‘இது, இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில் அவரிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘அவை நடவடிக்கைக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று ரமேஷ் பிதுரியிடம் பாஜக கேட்டது. அதேநேரம் ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தனது உறுப்பினர் பதவியை துறப்பேன் என டேனிஷ் அலி எச்சரித்திருந்தார்.

டெல்லி தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரமேஷ் பிதுரி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE