புதுடெல்லி: வேளாண்மை துறைக்கான புரட்சிகரமான பங்களிப்பினையும் தாண்டி எம்.எஸ்.சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கும் வழிகாட்டியாகவும் இருந்தார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 98. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலை 11.20 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பல்வேறு தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: “சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு எனக்கு அளவில்லாத வேதனையை தந்துள்ளது. உணவுப் பாதுகாப்புக்காக தொலைநோக்கு பார்வையுடன் அரயாது உழைத்தவர் அவர். அதற்காக இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று மிகச் சரியாக அழைக்கப்பட்டார். அவரது புரட்சி நமது நாட்டின் உணவுத் தேவையில் தன்னிறைவு பெற வைத்தது. வேளாண் துறையில் அவரது முன்னோடியான பயணம் அவருக்கு பத்ம பூஷன் முதல் சிறந்த விருதான சர்வதேச உணவு விருது வரை அவருக்கு பெற்றுத் தந்தது. அவர் இந்திய வேளாண் விஞ்ஞானத்தின் சிறந்த பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். அது பாதுகாப்பான மற்றும் பசி இல்லாத எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு வழிகாட்டியான ஒளியாக விளங்கும்."
பிரதமர் மோடி: எம்.எஸ். சுவாமிநாதனின் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "எம்.எஸ்.சுவாமிநாதன் ஜியின் மறைவால் மிகவும் வேதனை அடைகிறேன். அவரது மறைவுக்கு எனது இரங்கல்கள். நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் விவசாயத் துறையில் அவர் செய்த திருப்புமுனையான பணி நாட்டின் மில்லியன் கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்தது. விவசாயத் துறையில் அவரது புரட்சிகரமான பங்களிப்பினையும் தாண்டி, அவர் புதியனவற்றின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதல் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் மீது முத்திரைப் பதித்துள்ளது.
அவருடனான உரையாடல்கள் எப்போதும் எனது நெஞ்சில் இருக்கும். இந்தியா முன்னேற வேண்டுமென்ற அவரது ஆர்வம் முன்மாதிரியான ஒன்று. அவரது வாழ்வும் பணியும் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி."
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: “இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல். முன்னணி விஞ்ஞானி மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான எம்.எஸ்.சுவாமிநாதனின் வேளாண் அறிவியல் துறை பங்களிப்பு மற்றும் இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்த திருப்புமுனையான பங்களிப்பு எப்போதும் போற்றுதலுக்குரியது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அவரை, பொருளாதார சுற்றுச்சூழலின் தந்தை என்று அழைத்தது. இது மிகவும் பொருத்தமான அடைமொழியாகும்.
சிறந்த நிறுவனத்தை உருவாக்கியவர், சிறந்த நிர்வாகி இவை எல்லாவற்றையும் விட அவர் சிறந்த மனிதாபிமானி. பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனராக இருந்தபோது 1987-ம் ஆண்டு அவர் உலக உணவு பரிசினை பெற்றார். இது விவசாயத்துறையில் நோபல் அல்லது அவதற்கு இணையான தகுதியினையுடையது. நாடு சிறந்த விஞ்ஞானியை மட்டும் இழந்துவிடவில்லை, மக்களிடையே அறிவியல் மீது ஆர்வத்தை உருவாக்கிய ஒரு தேசிய ஆளுமையை இழந்து விட்டது."
காங்கிரஸ் கட்சி: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இந்திய பசுமைப் புரட்சியின் முக்கிய சிற்பி எம்.எஸ்.சுவாமிநாதன். அவரது பங்களிப்பு உணவு உற்பத்தியில் நம்மை தன்னிறைவு அடைய வைத்ததுடன் செழுமை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். மேலும், அவர் வரும் தலைமுறை விஞ்ஞானிகளுக்கும் தேசத்தைக் கட்டியெழுப்ப ஆர்வம் உள்ளவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பார் என்பதை நாங்கள் அறிவோம்."
கேரளா முதல்வர் பினராய் விஜயன்: "இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். விவசாயம் மற்றும் நீடித்த வளர்ச்சியில் உண்மையான தொலைநோக்கு பார்வை கொண்ட முன்னோடி அவர். உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதிலும் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதாலும் அவரது அயராத முயற்சி என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
கர்நாடகா முதல்வர் சித்தராமையா: "இந்தியாவின் முன்னோடியான அறிவியல் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையுமான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இந்திய விவசாயத் துறையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்துக்கான அவரது பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது. அவரது படைப்புகள் அரசாங்கத்தால் பரலவாக குறிப்பிடப்படுகின்றன. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது அனுதாபங்கள்."
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago