தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: அக்.1-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115
தொகுதிகளுக்கு ஆளும் பிஆர்எஸ் கட்சி ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதேபோல, காங்கிரஸ் கட்சியும் தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.

பாஜக மட்டும் இதுவரை தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இம்முறை கண்டிப்பாக தெலங்கானாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என பாஜகவினர் நம்பிக்கையோடு கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் அக். 1-ம் தேதி தெலங்கானாவில் பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, வரும் அக்டோபர் 1-ம் தேதி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மகபூப்நகர் செல்கிறார்.

அங்கு மதியம் 2.15 முதல் 2.50 மணி வரை பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின்னர் மதியம் 3 மணிக்கு ‘பாஜக சமர பேரி’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் 4 மணியளவில் அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE