ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய சட்ட ஆணையம் ஆதரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம்
ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 23-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 22-வது சட்ட ஆணையம் 3 அறிக்கைகளை மத்திய அரசிடம் விரைவில் தாக்கல்செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஒன்று ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பானது ஆகும். இந்த திட்டத்தை வரும் 2024 மற்றும் 2029-ம் ஆண்டுகளில் அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போக்சோ வயது: இதுபோல பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ)கீழ் குறைந்தபட்ச வயது நிர்ணயம் மற்றும் முதல் தகவல் அறிக்கையை இணைய வழியில் பதிவு செய்வது ஆகிய மேலும் 2 விவகாரங்கள் குறித்த அறிக்கையையும் சட்ட ஆணையம் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE