மணிப்பூர் மாநிலம் முழுவதும் ‘கலவரப் பகுதி’யாக அறிவிப்பு - AFSPA நடைமுறைகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் (AFSPA) மாநிலம் முழுவதையும் 'கலவரப் பகுதி’ (disturbed area) ஆக அம்மாநில அரசு அறிவித்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளைத் தவிர மாநிலம் முழுவதும் இந்நிலை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

இது குறித்து மணிப்பூர் மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பல்வேறு தீவிரவாத / கிளர்ச்சி குழுக்களின் வன்முறை நடவடிக்கைகள் மணிப்பூர் முழுவதும் சிவில் நடவடிக்கைகளைத் தொடருவதற்கு ஆயுதப் படைகளின் உதவியை நாடிடும் உத்தரவாதத்தை அளிக்கின்றது. தற்போது மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை மற்றும் அரசு இயந்திரத்தின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பதற்றமாக உள்ள இடங்களின் நிலையை இன்னும் ஆறு மாத காலத்துக்கு பதற்றமான இடங்களாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ள 19 இடங்களுக்கு இந்த நிலை பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிப்பூரில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்ட உடனேயே வெளியான இரண்டு மாணவர்களின் சடலங்களைக் கொண்ட புகைப்படம் விரைந்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செவ்வாய்கிழமை இரவு தலைநகர் இம்பாலில் போராட்டம் மூண்டது. இதனைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 45 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர். அதிரடிப்படையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில், அங்கு மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தால் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்பட்டிருக்கிறது. இருப்பினும், காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு, மருந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தளர்வு இருந்தாலும் கூட அநாவசியமான கூடுகைகள், பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் போலீஸ், சிஆர்பிஎஃப், அதிரடிப்படையினர் என மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கொலை குறித்து மாநில முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், “குற்றவாளிகளை பிடிக்க மாநில அரசும், மத்திய அரசும் தீவிரமாக இணைந்து செயல்படுகிறது என மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மணிப்பூர் குறித்து பிரதமர் மோடிக்கு மீண்டும் நினைவுறுத்தியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், "147 நாட்களாக மணிப்பூர் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடிக்கு இன்னும் அங்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்டு இருக்கும் கொடூரமான படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தச் சண்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை ஆயுதம் ஏந்தப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

பாஜகவினால் அழகிய மணிப்பூர் மாநிலம் இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி, பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். இதுவே கொந்தளிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி" என்று கார்கே தெரிவித்துள்ளார்.

மீண்டும் வன்முறையும் பின்புலமும்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மைத்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை நீடித்து வருகிறது. வன்முறைச் சம்பவங்களில் 170 பேர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். கலவரத்தில் காணாமல் போனவர்களில் ஹிஜம் (வயது17) மற்றும் ஹேம்ஜித் (20) என்ற இரு மாணவர்களும் அடக்கம்.

இந்நிலையில், மாணவர்கள் இருவரும் முகாம் ஒன்றில் புல் தரையில் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்கும் காட்சிகளும் பின்னர், இரு மாணவர்களும் கொல்லப்பட்டு கிடப்பதுமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கொலையாளிகள் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். கொலையாளிகளை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும், மீண்டும் போராட்டங்கள் வலுவாகி வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.

சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டம் (AFSPA) சொல்வது என்ன? - நாட்டின் எந்தவொரு பகுதியும் ‘கலவரப் பகுதி’யாக மாநில அரசாலோ அல்லது ஒன்றிய அரசாலோ அறிவிக்கப்பட்டவுடன் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும் படைகளுக்கு இந்தச் சட்டத்தின்படியான அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பில் எந்தவொரு நீதிமன்றமும் தலையிட முடியாது.

மேலும், சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டம் உயிரைப் பறிக்கும் வகையில் வலுவான தாக்குதல் நடத்த சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தபோதிலும், இச்சட்டத்தின் 4(அ) பிரிவு சட்டத்தை அமலாக்கும் சூழ்நிலைகளில், உயிரைப் போக்கும் வகையில் சுடுவதற்கான அதிகாரத்தை ராணுவப் படைகளுக்கும் அதற்கு உதவிகரமாக இருக்கும் மாநிலக் காவல் துறைக்கும் வழங்குகிறது.

‘ஆயுதங்களையோ’ அல்லது ‘ஆயுதங்களாகப் பயன்படுத்தத்தக்க பொருட்களையோ’ வைத்திருக்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட கூட்டத்தின் மீது உயிரைப் பறிக்கும்படியான தாக்குதலை மேற்கொள்ள இந்தச் சட்டம் வகை செய்கிறது. அதே நேரத்தில், ‘கூட்டம்’ மற்றும் ‘ஆயுதம்’ என்பதற்கான விளக்கம் எதுவும் இப்பிரிவில் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்