புதுடெல்லி: “எங்கள் கட்சிக்கு அதிகாரப் பசி இல்லை. அமித் ஷாவை சந்தித்தபோது கர்நாடகா அரசியல் நிலவரம் குறித்து விளக்கப்பட்டது” என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். பாஜக உடனான கூட்டணி குறித்து விளக்கமளிக்கும் விதமாக இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கடந்த வாரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது. இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்த மாதம் தசரா பண்டிகைக்குப் பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி - பாஜக இடையேயான புதியக் கூட்டணி, மஜத கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு தலைவர்கள் தங்களின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் நிலையில், பல முஸ்லிம் நிர்வாகிகள் கட்சியுடனான தொடர்பை விலக்கிக்கொள்ளப் போவதாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா புதன்கிழமை விளக்கமளித்துள்ளார். அவர், "நாங்கள் அதிகாரப் பசியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து விவாதித்தேன். பிரதமர் மோடியை நான் இன்னும் சந்திக்கவில்லை. உள்துறை அமைச்சரிடம் கர்நாடகாவின் அரசியல் நிலவரம் குறித்து விளக்கினேன். பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பாக, இதுகுறித்து என் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள், 8 எம்எல்சிகளின் கருத்துகளைக் கேட்டேன். பாஜகவுடன் புரிந்துணர்வு ஏற்படுத்துவதற்கு முன்பாக யோசிக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்றார்.
அதேவேளையில், இந்தக் கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதமாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதாகவும் இருக்கும் என்று பாஜக கூறியிருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்மாநிலங்களில் ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக, காங்கிரஸிடம் அதனை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் வர இருக்கிற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக தனது தேர்தல் யுக்தியை அமைத்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க பாஜகவுடன் கூட்டணி வைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேவகவுடாவின் மகனும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான குமாரசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர் இது உறுதி செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago