“மணிப்பூரில் அமைதி திரும்ப திறமையற்ற முதல்வரை நீக்க வேண்டும்” - பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான முதல்படியாக திறமையற்ற முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "147 நாட்களாக மணிப்பூர் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் பிரதமர் மோடிக்கு இன்னும் அங்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கும் கொடூரமான படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சண்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை ஆயுதம் ஏந்தப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

பாஜகவினால் அழகிய மணிப்பூர் மாநிலம் இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி, பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். இதுவே கொந்தளிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி" இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. மாநிலத்தில் வன்முறை தொடங்கியதில் இருந்து பிரதமர் அங்கு செல்லாதது குறித்து கேள்வியும் எழுப்பி வருகிறது.

முன்னதாக, கடந்த ஜூலை 6-ம் தேதி காணமல் போனதாக கூறப்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியான நிலையில், இம்பாலின் சிங்ஜமேய் பகுதியில் ஆர்ஏஎஃப் வீரர்களுக்கும் உள்ளூர் போராட்டக்காரர்களுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 45 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலுக்கு பின்னர் இம்பாலில் புதன்கிழமை அமைதி திரும்பி இருக்கிறது என்றாலும் பதற்றதம் நிலவுகிறது.

கலவரத்தின் பின்னணி: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE