காவிரி விவகாரம் | ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அளித்துள்ள பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 12-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுவே உத்தரவாக பிறப்பிக்கப்ப‌ட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதைக் கண்டித்து பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் குழுவின் செயலர் டி.டி.சர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்ற‌னர்.

கூட்டத்தில் பேசிய தமிழக அரசு அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை கர்நாடகா முறையாக திறக்கவில்லை. இதனால், தமிழகத்தில் நெற்பயிர்கள் கருகியுள்ளன. விவசாயிகள் பாதிக்க‌ப்பட்டுள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள 50 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். அக்டோபரில் திறக்க வேண்டிய 20.22 டிஎம்சி நீரை முறையாக வழங்க‌ வேண்டும். காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

கர்நாடக அரசு அதிகாரிகள், கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிற‌து. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மட்டும் 32 வட்டங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து 53 சதவீதம் குறைந்துள்ளது. இனிமேல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் கர்நாடகா இருக்கிறது என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா, ‘‘தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும். அதாவது, செப்.28-ம் தேதி (நாளை) முதல் அக்.15-ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் இந்த பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செப்.28-ம் தேதி (நாளை) முதல் அக்.15-ம் தேதி வரை விநாடிக்கு 3,000 கனஅடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுமாறு கர்நாடக அரசு வழக்கறிஞர்களிடம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு கர்நாடகாவில் தண்ணீர் இல்லை" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE