தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசு பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனை சாவடி வரை இயக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டன. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்துக்கு காவிரிநீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

இதை கண்டித்து மண்டியா, மைசூரு, பெங்களூருவில் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக அரசை கண்டித்து பாஜக, மஜத சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்டதை கண்டித்து செப்.26-ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கர்நாடக நீர்பாதுகாப்பு குழு தலைவர் குருபூர் சாந்தகுமார் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 6 மணி முதல்மாலை 6 மணி வரை பெங்களூருவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து மைசூரு வங்கி சதுக்கம் வரை கண்டன ஊர்வலம் நடக்கிறது.

150 அமைப்பினர் ஆதரவு: முழு அடைப்பு போராட்டத்துக்கு பெங்களூரு உணவக உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட 150 அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத, ஆம் ஆத்மி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சில தனியார் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன. தனியார் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும். சில நிறுவனங்கள் வீட்டில் இருந்துபணியாற்ற அனுமதி அளித்துள்ளன. அரசுப் பள்ளி, கல்லூரி, வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பேருந்துகள் நிறுத்தம்: தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனைச் சாவடி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட லாரி, சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், அல்சூர், டேனரி சாலை, ஆஸ்டின் டவுன், விவேக் நகர், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள‌து. ம‌ண்டியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறும்போது, ‘‘இந்த முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பாஜகவும், மஜதவும் காவிரி பிரச்சினையை அரசியலாக்கி வருகின்றன. போராடுவதற்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டம் - ஒழுங்கை கெடுக்கும் வகையில் போராடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் போராடினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். இதில் அரசுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE