“ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...“ - முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்மாநிலம் மீண்டும் வளர்ச்சி குன்றிய மாநிலமாக பின்னுக்குத் தள்ளப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தேர்தல் களப் பணியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று (செப்.25) உரையாற்றினார். அப்போது அவர், "மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் மாநிலம் வளர்ச்சி குன்றிய பிமாரு மாநிலமாகும். {பிமாரு - BIMARU) என்பது பொருளாதார, சுகாதார, கல்வியில் பின்தங்கிய மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடும் ஆங்கில வார்த்தையின் சுருக்கமாகும்}.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக அரசு 20 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அப்படியென்றால் இந்தத் தேர்தலை சந்திக்கவுள்ள முதன்முறை வாக்காளர்கள் பாஜகவின் ஆட்சியை மட்டுமே கண்டுள்ளனர் என்பது அர்த்தம். அவர்கள் காங்கிரஸின் மோசமான ஆட்சியைப் பார்க்காத அதிர்ஷ்டசாலிகள். அப்படிப்பட்ட மோசமான ஆட்சியை அவர்கள் பார்க்காமலேயே இருக்க வேண்டுமென்றால் காங்கிரஸுக்கு வாக்கு அளிக்கக் கூடாது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சிதான் மத்தியப் பிரதேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தது. காங்கிரஸ் வளமான மாநிலத்தை பிமாரு மாநிலமாக மாற்றியது. காங்கிரஸ் ஆட்சியில் சீரழிந்துகிடந்த சட்டம், ஒழுங்கை இப்போது முதன்முறையாக வாக்களிக்கவுள்ள இளைஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்தச் சூழலில் பாஜக களப் பணியாளர்கள் மாநிலம் முழுவதும் நிறைய யாத்திரை மேற்கொள்ள வேண்டும், மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ம.பி. எப்போதுமே பாஜகவின் கொள்கையை வளர்த்தெடுக்கும் மாநிலமாக இருந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் தொண்டர்கள் மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கின்றனர். இந்தக் கூட்டம் பாஜகவின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. மத்தியப் பிரதேசம் தேசத்தின் இதயம். இம்மாநில மக்கள் எப்போதுமே பாஜகவை ஆதரித்துள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பெண் சக்திக்குள் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டுகின்றனர். ஆனால், அவர்களின் பிரிவினைவாத அரசியலுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் 'செல்வந்தர்' ஒருவர் விவசாய நிலங்களை சுற்றுலா தலமாக மாற்றி ஃபோட்டோஷூட் நடத்துகிறார் என்று ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் கிண்டல் செய்தார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மைக்காலமாக ம.பி.யில் அதிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள், தொழிலாளர்களை சந்திப்பதை மோடி இவ்வாறாக கிண்டல் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 45 நாட்களில் மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளது இது மூன்றாவது முறையாகும்.

முன்னதாக நேற்று நடந்த ஊடக கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, " மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால் பிரதமர் மோடியும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் அங்கு அடிக்கடி பயணம் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE