``இந்தியா, அதுவே பாரத் -  கவனம் ஈர்த்த ராகுல் காந்தியின் ஜாலி பதில்

By செய்திப்பிரிவு

டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தது கவனம் ஈர்த்தது.

`நெட்ஃப்ளிக்ஸ் அல்லது ஜிம்முக்குச் செல்வீர்களா?' என்ற கேள்விக்கு `ஜிம்முக்குச் செல்வேன்!' என்று ஜிம்மை தேர்ந்தெடுத்தார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது இருந்த அவரின் தாடி குறித்து கேள்வி கேட்டதற்கு, "காங்கிரஸுக்கும் என்னிடமிருக்கும் பிரச்சினையே. தாடி, உணவு, உடை ஆகியவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எதுவாக இருந்தாலும் அப்படியே இருந்துவிடுவேன்" என்றார்.

தி காட்பாதர், தி டார்க் நைட் ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களில் எது பிடிக்கும் என்ற கேள்விக்கு இரண்டுமே மிக ஆழமான படங்கள் என்றார்.

நீங்கள் அரசியல்வாதியாக இல்லாவிட்டால் என்னவாக இருப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "என்னை நான் அரசியல்வாதியாக மட்டும் பார்க்கவில்லை. அப்படியானால் எதுவாக வேண்டுமானாலும் இருக்க வாய்ப்புண்டு. பிரியங்கா காந்தியின் பிள்ளைகளோடும், அவர்களின் நண்பர்களோடும் இருக்கையில் ஆசிரியராக இருப்பேன். அதுவே சமையலறையில் சமையல்காரராக இருப்பேன். இப்படி அனைவரும் பலவிதமான ஃபிரேம்களைக் (Frames) கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார்.

கிரிக்கெட் vs கால்பந்து என்று கேள்விக்கு, ``கிரிக்கெட்டைவிட கால்பந்து மிகவும் பிடிக்கும்" என்றார். தொடர்ந்து ரொனால்டோவா, மெஸ்ஸியா என்ற கேள்விக்கு, ``ரொனால்டோவைப் பிடிக்கும். மெஸ்ஸி ஒரு சிறந்த கால்பந்து வீரர். எனினும் ரொனால்டோவின் கருணை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று ராகுல் கூறினார்.

இறுதியாக, இந்தியா vs பாரத் என்று கேள்விக்கு, ``இந்தியா, அதுவே பாரத்" என்று கூறினார் ராகுல் காந்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE