`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்'- பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

டெல்லி: பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி என நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் போராட்டம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலையில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புகார் தெரிவித்தவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டக் கூடாது என மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற சம்பவத்தை டெல்லி போலீஸார், "வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷண் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார். தஜிகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடந்த நிகழ்ச்சியில், பிரிஜ் பூஷன் ஒரு வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்துள்ளார்.

வீராங்கனை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தந்தையைப் போல நடந்துகொண்டதாக அவரிடம் பிரிஜ் பூஷன் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல், அங்கு நடந்த இன்னொரு நிகழ்ச்சியின்போது, பிரிஜ் பூஷன் மற்றொரு மல்யுத்த வீராங்கனையிடம் அனுமதியின்றி அவர் அணிந்திருந்த மேலாடையை விலக்கி, தகாத முறையில் நடந்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE