விக்ரம் லேண்டர், ரோவரில் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை: இஸ்ரோ தகவல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிலிருந்து இதுவரை எந்த சிக்னலும் பெறவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலன்களை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை ஆக.23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.

இதற்கிடையே, நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் ரோவர், லேண்டர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (ஸ்லீப்பிங் மோடு) வைக்கப்பட்டன. ஏனெனில், லேண்டர், ரோவர் கலன்கள் சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி மின்சக்தியை கொண்டே இயங்குகின்றன. இரவு நேரத்தில் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இரு கலன்களும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, அவை உறக்க நிலைக்கு மாற்றப்பட்டன.

நிலவில் பகல் பொழுது வந்ததும் லேண்டர், ரோவர் கலன்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, தென்துருவப் பகுதியில் தற்போது சூரிய உதயம் தொடங்கி உள்ள நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இது இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விண்கலன்கள் உறக்க நிலையில் இருந்து விழித்துள்ளனவா என்பதை இஸ்ரோ அறிந்து கொள்ளும்.

இருந்தாலும் லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE