சோனியாவுக்கு எதிராக வெறுப்பு பேச்சு - அசாம் முதல்வர் மீது போலீஸில் காங்கிரஸ் புகார்

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை எரிக்க வேண்டும் என்று வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பேரணியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார்.

அப்போது அவர், காங்கிரஸின் முக்கிய உறுப்பினரான கமல்நாத்தின் இந்து அடையாளத்தை கேலி செய்யும் வகையில் பேசியதோடு, 10, ஜன்பத் எரிக்கப்பட வேண்டும் என்று வெறுப்புணர்வை தூண்டியுள்ளார்.

எனவே அசாம் முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேபப்ரதா சைக்கியா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 10, ஜன்பத் முகவரிஎன்பது சோனியா காந்தி வசிக்கும்இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. “சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில், பிஸ்வாசர்மாவின் இந்த மோசமான பேச்சு வன்முறை மற்றும் தீ வைப்புக்கு ஒரு தெளிவான தூண்டுதலை வழங்கியுள்ளதாக” போலீசிடம் அளித்த புகாரில் சைக்கியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசாகர் மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அசாம் முதல்வர் மீதான புகாரை ஆராய்ந்து வருவதாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE