ஆந்திர சட்டப்பேரவையில் மீசையை முறுக்கி, தொடையைத் தட்டிய பாலகிருஷ்ணா - எச்சரித்த சபாநாயகர்

By செய்திப்பிரிவு

அமராவதி: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நடந்த அமளியின்போது, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆளும் கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார். அவரின் இந்தச் செயலை சபாநாயகர் கண்டித்து எச்சரித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ஊழல் நடந்ததாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கடையடைப்பு, பேருந்துகள் நிறுத்தம் என அக்கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை இன்று கூடியது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், சபாநாயகர் தம்மினேனி சீதாராம் இருக்கையை சூழ்ந்துகொண்டு அமளியில் ஈடுப்பட்டவர்கள், காகிதத் துண்டுகளை வீசி ஏறிந்தனர். இதையடுத்து, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் 15 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

முன்னதாக, சபாநயகர் இருக்கையின் அருகே நின்றிருந்தபோது மீசையை முறுக்கி, தொடையை தட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சினிமாவில் வருவது போல சவால் விடுத்துள்ளார் இந்துப்பூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணா. இதை நீர்பாசனத் துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு கண்டிக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர், “மேடையில் காகிதங்களை வீசுவது, மீசையை முறுக்குவது, தொடையில் தட்டுவது போன்ற செயல்கள் பேரவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எம்எல்ஏவை எச்சரிக்கிறேன்” என்று பாலகிருஷ்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE