காவிரி நீர் விவகாரம் | கர்நாடகா - தமிழ்நாடு பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ‘‘அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்'' என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்ப‌ட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது. அதில், ''கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இருப்பினும் தமிழகத்தின் வேளாண்மை தேவைகளுக்காக நீர் திறந்துவிட்டுள்ளோம்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அணைகளில் நீர் இல்லாததால் எங்களால் திறக்க முடியாது. தற்போது இருக்கும் நீரை கொண்டு கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய இயலாது. தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியம் இல்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என கோரியிருந்தது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு, காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இணைந்து காவிரி நீர் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே, தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காதது ஏன் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் நேரில் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து நேரில் வலியுறுத்தியது. தமிழக அரசு பிரதிநிதிகள் மத்திய அமைச்சரைச் சந்தித்த இரண்டே நாட்களில், கர்நாடக முதல்வர் தலைமையிலான குழுவினரும் அவரைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்தக்கு தண்ணீர் திறக்க முடியாதது ஏன் என்பது குறித்து அவர்கள் மத்திய அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE