தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காதது ஏன்? - மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காதது ஏன் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தமிழகதுக்கு கர்நாடகா காவிரி நீரை திறந்து விட பரிந்துரை செய்தது. ஆனால், பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு கடந்த செவ்வாய் கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து நேரில் வலியுறுத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் நாங்கள் வலியுறுத்தினோம். கர்நாடக அரசுக்கு தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை.

அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இவை பிறப்பிக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 5000 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை கர்நாடகா அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று எடுத்துக் கூறினோம்." என்றார்.

தமிழக அரசு பிரதிநிதிகள் மத்திய அமைச்சரைச் சந்தித்த இரண்டே நாட்களில், கர்நாடக முதல்வர் தலைமையிலான குழுவினரும் அவரைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்தக்கு தண்ணீர் திறக்க முடியாதது ஏன் என்பது குறித்து அவர்கள் மத்திய அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.

பின்னர் புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், "கர்நாடகாவில் போதிய அளவு மழை இல்லை. இதனால், மாநிலத்தில் வறட்சி அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் இன்றி விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க முடியாத நிலையில் கர்நாடகா உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சரிடம் நேரில் விளக்கினோம்" என தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, காவிரி நீர் தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கர்நாடகாவில் பருவமழை பொய்த்துவிட்டதால், போதிய தண்ணீர் இல்லை. 230 தாலுகாக்களில் 195 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தாலுகாக்களும் விரைவில் சேர்க்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் மழை பொய்த்து நான் பார்த்ததில்லை. 123 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு இது. எனவே, காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க முடியாது. இதன் காரணமாகவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE