புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முழு ஆதரவுடன் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது | முழு விவரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் முழு ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று மாலை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு கூட்டத் தொடரின் 2-வது நாள் நிகழ்வுகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 19-ம் தேதி செயல்படத் தொடங்கியது. இதில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை (நாரி சக்தி வந்தன் அதிநியம்) தாக்கல் செய்து பேசினார்.

ராஜீவ் காந்தியின் கனவு: இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும் இந்த மசோதா மீதான விவாதம் தொடங்கியது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தியின் கனவு. இந்தமசோதாவை காங்கிரஸ் சார்பில் ஆதரிக்கிறேன். மசோதாவை நிறைவேற்றி, தாமதமின்றி விரைந்து அமலுக்கு கொண்டுவர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தலித், பழங்குடியின பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், சமாஜ்வாதி உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் மசோதாவை வரவேற்று பேசினர். ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி தினமான செப்.19-ம் தேதி புதிய நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது. அத்துடன் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நாள் நாடாளுமன்ற வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

மகளிருக்கு அதிகாரம் வழங்குவது, சில கட்சிகளைப் பொருத்தவரை அரசியல் விவகாரம், வாக்கு வங்கி அரசியலுக்கான கருவி. ஆனால், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தவரை இது அரசியல் விவகாரம் அல்ல. கொள்கைகள் மற்றும் நம்பிக்கை சார்ந்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கும்.

ஜி20 உச்சி மாநாட்டில் பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்துக்கான தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல், பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, சமஉரிமை ஆகியவற்றுக்கு மத்தியஅரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள விமானிகளில் பெண்களின் பங்கு 5 சதவீதம்தான். இந்தியாவில் இது 15 சதவீதமாக உள்ளது.பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆண்களைவிட திறமையானவர்கள் பெண்கள் என்பதே சரி.

நாட்டில் முக்கிய முடிவுகளை எடுத்தல் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பை மகளிர் இடஒதுக்கீடு மசோதா உறுதி செய்யும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.ஏற்கெனவே 4 முறை தாக்கல்செய்யப்பட்டும், நிறைவேறவில்லை. இது 5-வது முறை. இப்போது மசோதா ஒருமனதாக நிறைவேற அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

454 உறுப்பினர்கள் ஆதரவு: மகளிர் இடஒதுக்கீடு மசோதா, அரசியல் சாசன (128-வது திருத்த) மசோதா என அழைக்கப்படும். அரசியல் சாசன திருத்தம் என்பதால் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களவையில் நேற்று விவாதம் முடிந்த பிறகு, மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 456 பேர் வாக்களித்தனர். இதில் 454 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 2 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, இந்த மசோதா நிறைவேறியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதன்மூலம், புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய முதல் மசோதா என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.

மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விவாதம் நடந்து, மாநிலங்களவையிலும் இன்றே நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில் இது அமலுக்கு வராது. தேர்தலுக்குபிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, அதன்பிறகு நடக்கும் தேர்தலில்தான் அமலுக்கு வரும்.

மகளிர் மசோதா கடந்து வந்த பாதை

1996: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முன்னணி (யுஏ) அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது. ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, கீதா முகர்ஜி தலைமையிலான கூட்டு நாடாளுமன்றக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

1996: டிசம்பர் 9-ம் தேதி கீதா முகர்ஜி தலைமையிலான குழுவின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

1998: அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு மீண்டும் இந்த மசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால் தோல்வியுற்றது.

1999: இதைத் தொடர்ந்து, மீண்டும் இந்த மசோதாவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

2002: மக்களவையில் கூச்சல், குழப்பத்துக்கு இடையே மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் நிறைவேற்றப்படவில்லை.

2003: மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

2008: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) அரசால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

2010: இந்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கலாகி நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இதனால் மசோதா இந்த முறையும் நிறைவேற்றப்படவில்லை.

2014, 2019: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் அறிக்கையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றுவோம் என பாஜக உறுதி அளித்திருந்தது.

2023: மக்களவையில் முழு ஆதரவுடன் மகளிர் மசோதா நிறைவேற்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்