உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பெண் நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காக்கிநாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் காக்கிநாடா நகர மகளிர் அணி தலைவர் சிக்கலா சத்தியவதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதியா தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் உள்ளார்.

அவர் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காக்கிநாடாவில் அக்கட்சி உறுப்பினர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களை காக்கிநாடா நகர மகளிர் அணி தலைவராக செயல்பட்ட சிக்கலா சத்தியவதி ஒருங்கிணைத்தார்.

இந்தச் சூழலில் புதன்கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அக்கட்சியின் காக்கிநாடா நகர் பொறுப்பாளர் வனமாதி வெங்கடேஷ்வர ராவ் உறுதி செய்துள்ளார். அவரது மரணத்துக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE