மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவை 2024 தேர்தலில் அமல்படுத்த மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்க 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டு வரும் நோக்கில் அதற்கான மசோதா புதிய நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக சட்டமாக ஆகாது.

நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா குறைந்தபட்சம் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்தான் அமலுக்கு வரும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் 50% சட்டப்பேரவைகள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், இந்த மசோதாவை விரைவாக சட்டமாக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், "கொள்கை அளவில் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இது ஒரு அடையாள மசோதா என்றே நாங்கள் கருதுகிறோம். இந்த மசோதா அமலாக்கப்பட இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு. இரண்டாவது, தொகுதி மறுவரையறை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகப் பெரிய நடைமுறை.

தொகுதி மறுவரையறையும் சிக்கலான ஒன்று. ஏனெனில், மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. அவ்வாறெனில், தென் மாநிலங்களில் மக்கள் பிரதிநிதித்துவம் குறையும். இது தென் மாநிலங்களுக்கான தண்டனையாக மாறும். மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான தொகுதி மறுவரையறை இல்லாமல், இந்த மசோதா ஒருபோதும் அமல்படுத்தப்படாது" என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் கூறும்போது, "இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு தேவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா சட்டமாகவில்லை.

பாஜக உண்மையாகவே இந்த மசோதாவை விரும்பி இருந்தால், 2021-ம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்கள். அதோடு, இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்திருக்கும். ஆனால், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்பதால், 2029ம் ஆண்டு தேர்தலின்போதுதான் இது அமலாக வாய்ப்புள்ளது. பாஜகவின் திட்டம் தெளிவாகிவிட்டது" என விமர்சித்துள்ளார்.

திமுக மக்களவை எம்.பி கனிமொழி பேசும்போது, “இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். அவரது உரையை முழுமையாக வாசிக்க > ‘மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா’ சலுகை அல்ல, பெண்களின் உரிமை: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? - காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது?

இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் SC, ST மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கடந்து வந்த பாதை: கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. கடந்த 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE