கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இண்டியா கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விலகல்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட எதிரும் புதிருமாக உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக 3 ஆலோசனை கூட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு இண்டியா என பெயர் வைத்துள்ளன. இந்நிலையில், முக்கிய அரசியல் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இண்டியா கூட்டணியிலிருந்து விலகி செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஊடக தகவல்கள் தெரிவிப்பதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளிலிருந்தும் மார்க்சிஸ்ட் விலகி இருக்க விரும்புகிறது. சிபிஐ-எம்-ன் இந்த நடவடிக்கை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட விரும்பும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கலந்து கொள்ளவில்லை. 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் ஒரு இடம் காலியாகவே இருந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தாலும் அதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏனெனில், இடது சாரிகளுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என்று ஏற்கெனவே அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, கேரளாவிலும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை தனியாக எதிர்கொள்ளும் வகையில் இண்டியா கூட்டணியிலிருந்து விலகி போட்டியிடவே கடந்த வாரம் நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால், இண்டியா கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தனது கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், சிபிஐ-எம் மற்றும் மம்தா பானர்ஜி இடையேயான போட்டி, அதே போல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றம் ஆகியவற்றால் இண்டியா கூட்டணி யானது இடியாப்ப சிக்கலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE