புதிய நாடாளுமன்றம் செயல்பட தொடங்கியது - மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு கூட்டத் தொடரின் 2-வது நாள் நிகழ்வுகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்றுசெயல்படத் தொடங்கியது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

விநாயகர் சதுர்த்தி திருநாளில்..: விநாயகர் சதுர்த்தி திருநாளில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெறுகிறது. சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து, நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் ‘சம்வத்சரி பர்வா’என்ற மன்னிப்பு கேட்கும் பண்டிகையை கொண்டாடுகிறோம். இந்த நாளில் கடந்தகால கசப்புகளை மறந்துஒற்றுமையுடன் முன்னேற வேண்டும்.

புதிய நாடாளுமன்றத்தில் புனிதசெங்கோல் நிறுவப்பட்டுள்ளது. முதல்பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் கரம்பட்ட இந்த புனித செங்கோல், கடந்த காலத்தின் மிக முக்கியமான பகுதியுடன் நம்மை இணைக்கிறது. உறுப்பினர்கள் அனைவருக்கும் இது புதிய உத்வேகம் அளிக்கும்.

நவீன இந்தியாவின் வரலாற்று சின்னமாக புதிய நாடாளுமன்றம் விளங்குகிறது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் இதை கட்டியெழுப்பி உள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவர்களை கவுரவித்து, டிஜிட்டல் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் என்பது இந்திய ஜனநாயகத்தின் கோயில். கட்சி நலன் சார்ந்து இங்கு செயல்பட கூடாது. நாட்டின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். நம் கருத்துகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நாட்டின் நலன் கருதி ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

‘பெண் சக்திக்கு வணக்கம்’: புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக ‘நாரி சக்தி வந்தன்’ (பெண் சக்திக்கு வணக்கம்) மசோதாதாக்கல் செய்யப்படுகிறது. இந்தமசோதா மூலமாக மகளிருக்கு33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

‘என்னை தேர்வு செய்த கடவுள்’: மகளிர் இடஒதுக்கீடு மசோதா 1996-ல் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்ற முடியவில்லை. இந்திய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே கருதுகிறேன். இந்திய தாய்மார்கள், சகோதரிகளின் கையில் அதிகாரத்தை அளிக்க வேண்டியது நமது கடமை. இந்த மசோதா மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடையும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

பிரதமர் பேசியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் அரசே கொண்டு வந்தது. தற்போதைய பாஜக அரசு, காங்கிரஸுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை’’ என்று கோஷமிட்டனர்.

அமளிக்கு நடுவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘மக்களவையில் 82 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா அமலுக்கு வரும்போது, இந்த எண்ணிக்கை 181 ஆக அதிகரிக்கும்’’ என்றார். எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பேசினார். ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாஅடுத்த சில நாட்களில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அங்கு எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. நாட்டின் நலன் கருதி, மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்றார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி மற்றும் காரசாரமான விவாதங்களுக்கு பிறகு, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்