இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் முதல் கனடாவுக்கு இந்தியா பதிலடி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.19, 2023

செய்திப்பிரிவு

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் முதல் நிகழ்வாக, மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

மசோதாவுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் மோடி, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்று, இதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். எனவே, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நமது அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

புதிய கட்டிடத்துக்கு மாறிய நாடாளுமன்றம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடியது. மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், பழைய நாடாளுமன்றம் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களைக் கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். அப்போது அவர் "புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்ல உள்ளோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்; அதை அடைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் நாம் புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்வோம்" என்று தெரிவித்தார்.

பருவமழை முன்னெச்சரிக்கை: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின்போது பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

‘கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கூறினோம்’: தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்துமாறு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கோரினோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன் இதனைத் தெரிவித்தார்.

கொடநாடு விவகாரத்தில் வழக்கு தொடர இபிஎஸுக்கு அனுமதி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கார்கே வலியுறுத்தல்: அரசியலமைப்பின் மதிப்புகள், நாடாளுமன்ற மரபுகளையும் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். மேலும், தேசத்தைக் கட்டியெழுப்பவும், அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மணிப்பூரில் 5 இளைஞர்களின் கைதுக்கு எதிராக பந்த்: மணிப்பூரில் மீரா பைபி என்கிற மைதேயி பெண்கள் அமைப்பு, ஐந்து உள்ளூர் அமைப்புகளும் இணைந்து நடத்தும் பந்த் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதம் தாங்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக்கோரி இந்த அமைப்புகள் நள்ளிரவு முதல் 48 மணிநேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா:காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன" என்று கூறினார். இதனை இந்தியா அபத்தமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் சர்ச்சையில் இந்தியா பதிலடி: காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

‘என் உயிர் தோழன்’ பாபு காலமானார்: 1990-ம் ஆண்டு வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. இந்தப் படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ பாபு என பரவலாக அறியப்பட்டவர். படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த அடிப்பட்டது. முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே “மிகப் பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவர்” என ‘என் உயிர் தோழன்’ பாபு மறைவுக்கு இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT