மணிப்பூரில் 5 இளைஞர்களின் கைதுக்கு எதிராக பந்த்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் மீரா பைபி (Meira Paibi) என்கிற மைதேயி பெண்கள் அமைப்பு, ஐந்து உள்ளூர் அமைப்புகளும் இணைந்து நடத்தும் பந்த் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதம் தாங்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக்கோரி இந்த அமைப்புகள் நள்ளிரவு முதல் 48 மணிநேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த பந்த் காரணமாக செவ்வாய்க்கிழமை சந்தைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, சில வாகனங்களே சாலைகளில் ஓடின. இதனிடையே மணிப்பூர் மேல்நிலை கல்வி வாரியம் செவ்வாய் மற்றும் புதன் கிழமை நடத்த திட்டமிட்டிருந்த 10 ஆம் வகுப்புக்கான அனைத்து துணைத்தேர்வுகளும் பந்த் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரா பைபி அமைப்பினர் ஐந்து இளைஞர்களை விடுவிக்கக் கோரி திங்கள்கிழமை இம்பால் கிழக்கு மாட்டத்தின் ஹுரை மற்றும் கோங்பா, மேற்கு மாவட்டத்தின் காக்வா, பிஷ்னுபூர் மாவட்டத்தின் நம்போல், தவுபால் மாவட்டத்தின் சில பகுதிகளின் முக்கிய சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, மணிப்பூர் போலீஸார் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உருவத்தை மறைக்கும் சீருடைகள் வைத்திருந்ததாகக் கூறி 5 இளைஞர்களைக் கைது செய்தனர். அதுகுறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் கைது குறித்து, அனைத்து லாங்தபால் கேந்திர குழுவின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் யும்நம் ஹிட்லர் கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இளைஞர்களும் சாதாரண ஜனங்கள் மற்றும் கிராமத் தன்னார்வளர்கள். பாதுகாப்புப் படையினர் தங்களின் கடமையைச் சரிவர செய்யத் தவறியதால், குகி ஸோ போராட்டக்கார்களிடமிருந்து தங்களின் கிராமங்களைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வந்தனர். எந்தவித நிபந்தனையுமின்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசு அவர்களை விடுதலைச் செய்யத் தவறினால் போராட்டம் இன்னும் தீவிரமடையும்" என்று தெரிவித்தார்.

இளைஞர்களை விடுவிக்கக் கோரி போராட்டக்காரர்கள், போரோம்பட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதன்காரணமாக அசாம் ரைபில் ஃபோர்ஸ் வீரர்கள் சிலருக்கும் போராட்டக்காரர்கள் சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE