புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதியுடன் புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்வோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்றம் இன்று முதல் செயல்படத் தொடங்க உள்ளது. முன்னதாக, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், பழைய நாடாளுமன்றம் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "புதிய நாடாளுமன்றத்திற்கு மாற உள்ள நிலையில், கடைசியாக பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாட்சியாக இதுவரை இந்த நாடாளுமன்றக் கட்டிடம் திகழ்ந்துள்ளது" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்பி மேனகா காந்தி, "இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். ஆழமாக வேரூன்றிய சமச்சீரற்ற தன்மையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சரி செய்து பெண்கள் அனைவருக்கும் சமமான பங்கை வழங்குவதற்கான இந்த தருணத்தில் நான் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோம் என்ற திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் பிரதமர் எனக்கு மிகப் பெரிய மகிச்சியைத் தந்தார். தற்போது இது தொடர்பான புள்ளி விவரங்கள் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. இரண்டே ஆண்டுகளில் நாட்டின் சிந்தனையை நாம் மாற்றி இருக்கிறோம்" என குறிப்பிட்டார்.
» கனடா தூதர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு: காலிஸ்தான் சர்ச்சையில் இந்தியா பதிலடி
» மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் கட்சியினுடையது: சோனியா காந்தி கருத்து
நிகழ்ச்சியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்களையும், ஏராளமான மிக முக்கிய தருணங்களையும் வழங்கிய இந்த நாடாளுமன்றக் கட்டிடத்தில் நின்று பேசுவதை எண்ணி மகிழ்கிறேன்" என்று தெரிவித்தார். "இந்த நாடாளுமன்றக் கட்டிடத்தின் மலரும் நினைவுகளை நேற்று நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இன்று நாம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்ல உள்ளோம். இது ஒரு வரலாற்றுத் தருணம்" என மாநிலங்களவையின் அவைத் தலைவர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "இந்த மைய மண்டத்தில்தான் அரசியல் நிர்ணய சபை செயல்பட்டது. நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள் மிகப் பெரிய பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள்தான் மிகப் பெரிய சமூக, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்கள்" என கூறினார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, "இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளமையான பாரம்பரியத்தை நினைவுகூறும் நோக்கில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாம் இன்று கூடி இருக்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்ததை முன்னிட்டு பிரமதர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரைக்கு சாட்சியாக இந்த மைய மண்டபம் திகழ்கிறது. நேற்று பிரதமர் மோடி பேசுகையில் அவரும் இதனை குறிப்பிட்டார். அதற்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். "புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்ல உள்ளோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்; அதை அடைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் நாம் புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்வோம். எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியல் பலன்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதில் நாம் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அறிவும் புதுமையும்தான் தேவை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு நமது இளைஞர்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது.
நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதில் இந்த நாடாளுமனறக் கட்டிடம் சாட்சியாக இருந்துள்ளது. ஏராளமான சட்டங்களை இயற்றியதன் மூலம் பல்வேறு தரப்பினருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் இஸ்லாமிய தாய்மார்களும் சகோதரிகளும் தங்களுக்கான நீதியை பெற்றார்கள். அதற்கான சட்டம் இந்த நாடாளுமன்றத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை நாம் ஒருமனதாகக் கொண்டு வந்து அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தோம். சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்தது நமக்கான பெருமிதம். இந்த நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றி திருநங்கைகளுக்கு நீதி வழங்கி இருக்கிறது. அதன்மூலம் அவர்கள் கண்ணியமான முறையில் கல்வி கற்கவும், வேலைவாய்ப்பைப் பெறவும், சுகாதாரத்தைப் பெறவும் முடிந்திருக்கிறது.
அமிர்த காலத்தின் 25 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. தற்சார்பு இந்தியாவை முதலில் நாம் அடைய வேண்டும். இது காலத்தின் தேவை. இது அனைவரின் கடமை. நாம் புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்ல உள்ளோம். அதேநேரத்தில், இந்த பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கெளரவம் ஒருபோதும் குறையக்கூடாது. இதை பழைய நாடாளுமன்றக் கட்டிடமாக விட்டுவிடக்கூடாது. எனவே, நீங்கள் ஒப்புக்கொண்டால் இது சம்விதன் சதன் என அறியப்பட வேண்டும்" என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago