நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படுமா?- ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் எழுந்த பேச்சால் சர்ச்சை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மகராஷ்டிராவின் புனேவில் நடந்து முடிந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில், பெண்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசப்பட்டது. இதனால், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின்(ஆர்எஸ்எஸ்), அகில பாரத சாமான்யர்களின் மூன்று நாள் கூட்டம் கடந்த வெள்ளிகிழமை புனேவில் முடிந்தது. இதில், அதன் தலைவர் மோகன் பாகவத், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 36 அமைப்புகளின் 266 அழைப்பாளர்கள் இருந்தனர். இதன் நிறைவுரையில் பேசிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகியான டாக்டர்.மன்மோகன் வைத்யா, பெண்களின் முக்கியத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் டாக்டர்.மோகன் வைத்யா பேசியபோது, ‘ஒரு குடும்பத்தில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, நம் சமூகத்தின் அனைத்து அமைப்புகளிலும் பெண்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட அமைப்புகளிலும் பெண்களின் பங்கு அனைத்துத் துறையிலும் அதிகரிக்க வேண்டும்.இதன் மீது எங்கள் அமைப்பின் அகில இந்திய அமைப்பாளர்களின் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.’ எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இன்று செப்டம்பர் 18 இல் துவங்கும் ஐந்து நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகளிர் மசோதாவும் நிறைவேற்றப்படுமா? எனும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஏனெனில், கடந்த வாரம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பேச்சு எழுந்திருந்தது. அதற்கு இரண்டு நாள் முன்னதாக அசாமின் ஒரு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இனி இந்தியாவை பாரத் என அழைப்பதே சரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், மக்களவை, சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் ஒதுக்கும் மகளிர் மசோதா பற்றிய பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.

இச்சூழலில், நேற்று அனைத்து கட்சிக் கூட்டத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்றும்படி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

மகளிர் மசோதா, தேவகவுடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்ற மக்களவையில் 1996 இல் முதன்முறையாக அறிமுகமானது. ஆனால், அப்போது கூட்டணி ஆட்சி என்பதால் அது நிறைவேறவில்லை.

எனினும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த மசோதா 2010-ல் அறிமுகமாகிமாநிலங்களவையில் நிறைவேறியது. தொடர்ந்து மக்களவையில் கடும் எதிர்பால் இதை நிறைவேற்ற முடியவில்லை. அப்போது, மகளிர் மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.

சமாஜ்வாதியின் முலாயம்சிங், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பளித்தனர்.

இதனால், 2014 இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்ததும் இம்மசோதாவின் எதிர்பார்ப்பு கூடியது. இதற்காக, மார்ச் 2017 இல் திமுகவின் மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி. டெல்லியில் ஒரு பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினார்.

இதில், முக்கிய பெண் தலைவர்கள் உள்ளிட்ட பல பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். திரளான காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு ஆதரவளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE