1966-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் டிசம்பர் 29 முதல் நான்கு நாட்களுக்கு திமுக மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் அண்ணா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஆனால், வந்தவாசிக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இதனால்நான் கொஞ்சம் வருத்தப்பட்டு வீட்டுக்கு போய் தூங்கி விட்டேன். ஆனால் என் நண்பர்கள் தோப்பூர் திருவேங்கடம், துரைமுருகன், எல்.கணேசன் ஆகி யோர் “நிச்சயம் நீதான் வேட்பாளர். நம்பிக்கையோடு இரு” என்று என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
ஒரு வாரம் கழித்து அண்ணா வந்தவாசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்தார். வந்தவாசி தொகுதியில் என்னை ஆதரித்து அண்ணா பேசும்போது “தம்பி விஸ்வநாதன் என்னை விட அதிகம் படித்தவர். இவரைப் போன்றவர்கள்தான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஒரு கட்சியின் தலைவர் தனது தொண்டனை இப்படி வஞ்சனை இன்றி புகழ்ந்து பேசுவாரா என்று கேட்டால் அது அண்ணாவுக்கு மட்டுமே சாத்தியம்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வயது 26. அப்போது என்னுடைய சக உறுப்பினராக இருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள். இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், பெருந்தலைவர் காமராஜ், டாக்டர் கரன்சிங், அசோக் மேத்தா, சித்தார்த்த சங்கரே, மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள் ஆளுங்கட்சி வரிசையில். எதிர்க்கட்சி வரிசையில்வாஜ்பாய், ஆச்சார்ய கிருபளானி, ராம் மனோகர் லோகியா, இந்திரஜித் குப்தா, ஏ.கே.கோபாலன், என்.ஜி.ரங்கா, பிலுமோடி, மதுலிமாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், எஸ்.ஏ.டாங்கே மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் என்று பெரிய தலைவர்கள்.
திமுகவின் நாடாளுமன்ற குழுவுக்கு பேராசிரியர் அன்பழகன் தலைவர்; நாஞ்சில் மனோகரன் துணைத் தலைவர்;கா.ராசாராம் கொறடா; நான் துணைகொறடா. ஒன்பதுமணிக்கு நாடாளுமன்றத்துக்கு போய்விடுவேன். நாடாளுமன்ற நூலகத்தில் அமர்ந்து இதற்கு முன்நடைபெற்ற விவாதங்களின் பதிவுகளை குறிப்பெடுப்பேன். அன்று பேசவிருக்கும் பொருள் பற்றியும் வரவிருக்கும் கேள்விகள் பற்றியும் குறிப்பு எடுத்துக் கொள்வேன். நாடாளுமன்ற கூட்டங்களுக்கு நான் ஒரு நாள்கூட ‘ஆப்சென்ட்’ கிடையாது.
அந்த நாட்களில் நாடாளுமன்றக் கூட்டம் மிகவும் அமைதியாக நடந்தது. காரசாரமாக விவாதம் நடக்கும். ஆனால்,எந்த உறுப்பினரும் எல்லை மீற மாட்டார்கள். தனிநபர் சாடல், தனிநபர்துதி பாடல் இரண்டுமே இருக்காது.ஆளுங்கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட மசோதாக்களில் உள்ள குறையைஎடுத்துச் சொல்ல யோசித்தது கிடையாது. சபாநாயகரை முற்றுகையிடும் சம்பவங்கள் எல்லாம் கிடையாது.
இந்திரா காந்தி ஆட்சி என்பது பெரும்பான்மை ஆட்சி என்றாலும் அதிக அளவுநம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் அவர் மீதுதான் கொண்டுவரப்பட்டது. எல்லா நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் நான் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆனால், எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு இந்திராகாந்தி பதில் அளிப்பார். கூச்சல் குழப்பம், பேச விடாமல் குறுக்கிடுவது போன்றவை பெரும்பாலும் நிகழாது.எல்லா மசோதாக்களும் முழுமையாக விவாதம் நடந்த பிறகுதான் நிறைவேறும்.
இப்போதெல்லாம் முழு விவாதம் நடந்து பட்ஜெட் நிறைவேறுவதில்லை. பல நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. இதனால் கடைசி நாள் அவசர கதியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ‘யெஸ்’ என்ற குரலுடன் பட்ஜெட்நிறைவேற்றப்படுகிறது. ஆனால், நான்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அப்படி இல்லை. உறுப்பினர்கள் சொல்லும் ஆலோசனைகள், கருத்துகள், குறைகளை நிதியமைச்சர் கவனமாக கேட்டுக் குறிப்பெடுத்துக் கொள்வார். விவாதம் முடிந்து தீர்மானத்தை, ஓட்டுக்கு விடுவதற்கு முன்பு எல்லா கேள்விகளுக்கும் நிதியமைச்சர் பதில் சொல்வார்.
அப்போதெல்லாம் நாடாளுமன்ற கூட்டங்கள் 150 நாள் எல்லாம் நடந்திருக்கிறது. இப்போது ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள் 40 நாட்கள் நடந்தாலே அதுவேஆச்சரியம் என்று ஆகிவிட்டது. இது ஆரோக்கியமான நடைமுறை அல்ல. நாடாளுமன்றம் என்பது மக்களின் நம்பிக்கைக்கான தளம், மக்களின் குரல்தான் நாடாளுமன்றத்தில் கட்சி வித்தியாசமின்றி எதிரொலிக்கிறது. இதை உறுப்பினர்களும் உணர வேண்டும் ஆட்சி செய்பவர்களின் நடவடிக்கையும் அதற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜரை நிச்சயம் பார்க்கலாம். அவர் தென்னாட்டு எம்.பி.க்கள் உடன் சகஜமாக பேசுவார். தமிழக எம்.பி.க்களிடம் உரிமையோடு பழகுவார். சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிலுமோடியும் நானும் நல்ல நண்பர்கள். மைய மண்டபத்தில் காபி அருந்தியபடியே நாங்கள் அரசியல் பேசுவோம்.
ஆட்சி மொழி சட்ட திருத்தமசோதா விவாதத்தில் பேராசிரியர் அன்பழகன் இந்தி திணிப்பை பற்றி ஆணித்தரமாக தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவர் அந்த மசோதா குறித்து பேசும்போது “இந்தியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க நீங்கள் 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். காரணம், உங்களுக்கே உங்கள்மொழி மீது நம்பிக்கை இல்லை. இந்தி வளர்ச்சிஎன்பது இயற்கையானது அல்ல” என்று பேசினார்.
இதேபோல் 1967-ல்ஜன சங் உறுப்பினராக இருந்த வாஜ்பாய் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துதரும் 370 பிரிவை நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசும்போது, “காஷ்மீர் சிறப்புஅந்தஸ்து என்பது தற்காலிகமானதுதான் என்றும் இந்த சட்டம் சட்டத்திருத்தம் சீக்கிரம் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தி 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் தொடர வேண்டுமா என்பதுதான் என் கேள்வி” என்று கேட்டார் வாஜ்பாய்.
நான் அப்போது மிகவும் சிறு வயதுஎன்பதால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை வாயில் காவலர்கள் நம்ப மாட்டார்கள். ஒவ்வொரு முறையும்நான் அடையாள அட்டையை காண்பித்து விட்டுதான் நாடாளுமன்றத்தில் உள்ளே போவேன். அப்படி நான் அடையாள அட்டை காட்டும் போது ‘இந்தச் சிறுவனாநாடாளுமன்ற உறுப்பினர்’ என்று ஆச்சரியத்துடன் என்னை அனுமதிப்பார்கள்.
ஒருமுறை நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா துணைத் தலைவர் வயலட்ஆல்வா உடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர் மார்கெட் ஆல்வாவின் மாமியார்.அப்போது அங்கு வந்த வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்னை சுட்டிக்காட்டி “யார் இந்தப் பையன்” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அப்போது வயலட் ஆல்வா,“அவர் பையன் இல்லை. உங்களைபோல அவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான். திமுக எம்.பி.” என்று சொன்னார். அப்போது அவர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
அண்ணாதான் நாடாளுமன்றத்தின் கதவை இளைஞர்களுக்காக திறந்துவைத்தார். இளைஞர்களை அரசிய லுக்கு கொண்டுவந்து புதிய சரித்திரம் படைத்தார். அதன் பிறகுதான் மற்ற கட்சிகள் இளைஞர்களுக்கு மதிப்பும் முக்கியத்துவம் தரத் தொடங்கின.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago