மத்திய அமைச்சர் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்ய 8,000 பேர் உறுதிமொழி ஏற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 8 ஆயிரம் பேர் உடல் உறுப்புதானம் தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள ஜிஐசி மைதானத்தில் உடல் உறுப்பு தானம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது. அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். இதனால் பலர் மறுவாழ்வு பெற முடியும். மிகவும் முக்கியமான இந்த தானத்தை அனைவரும் செய்யும்போது பலருக்கு புதிய உயிரையும், புது வாழ்வையும் நீங்கள் அளிக்க முடியம்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஏழைமக்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும அவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டு முடிவுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் உறுப்புகளை தானமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்படும்.

மற்றொரு உயிரைக் காப்பாற்ற உறுப்புகளைத் தானம் செய்வதை விட மனித குலத்துக்கு பெரிய சேவை எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 8 ஆயிரம் பேர் உடல் உறுப்பு தானஉறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆக்ராவிலுள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு (எஸ்என்எம்சி) சென்ற மன்சுக் மாண்டவியா ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE