பாஜக.வின் ஓபிசி வாக்கு வங்கியை வலுப்படுத்தும் ‘விஸ்வகர்மா’

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக.வின் ஓபிசி வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் பிஎம் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது என கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையிலான பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை, அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து விஸ்வகர்மா தினம் மற்றும் தனது 73வது பிறந்தநாளில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முன் பகவான் விஸ்வகர்மாவை பிரதமர் மோடி வழிபட்டார்.

அதன்பின் இத்திட்டத்தை டெல்லியின் துவாரகா பகுதியில் புதிததாக கட்டப்பட்ட யசோபூமி என்ற இந்திய சர்வதேச அரங்கம் மற்றும் கண்காட்சி மையத்தில் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளான 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கைகள் மற்றும் உபகரணங்களால் பணி செய்யும் அனைவருமே விஸ்வகர்மா எனவும், பாரம்பரிய திறன்களை வளர்க்க கடினமாக உழைப்பவர்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தன்னால் முடிந்ததை செய்யும்’’ என்று கூறினார்.

இந்த திட்டம் பாரம்பரிய கலைஞர்களுக்கு பயிற்சி, தொழில்நுட்பம், உபகரணம், சலுகை வட்டியில் கடனுதவி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் உதவி போன்றவற்றை வழங்குகிறது. இத்திட்டம் நாட்டில் உள்ள அதிகளவிலான மக்களை சென்றடையும். குறிப்பாக பாஜக.வின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் திட்டம் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 45 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஓபிசி பிரிவினர். இவர்கள் கடந்த2014-ம் ஆண்டு முதல் பாஜக.வுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துகின்றன. சில மாநில கட்சிகள், முக்கியமான ஒன்றிரண்டு பிரிவினரின் ஓட்டு வங்கிகளை பெறுவதில் கவனம் செலுத்துகின்றன.

இந்நிலையில் பாஜக.வின் ஓபிசி வாங்கு வங்கியை ஒருங்கிணைப்பதில், பிஎம் விஸ்வகர்மா திட்டம் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE