பாஜகவை தோற்கடிக்கும் இலக்கு நிச்சயம் எட்டப்படும்: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முதல்முறையாக தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செயற்குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "காங்கிரஸ் கட்சியின் இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஒரு தெளிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரும் 2024ல் பாஜக அரசை நாங்கள் வீழ்த்துவோம். அதற்காக ஓய்வின்றி இன்று முதல் உழைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 5 மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" என தெரிவித்தார்.

"இந்த சந்திப்பு தேர்தலுக்கானது. பெரும்பான்மை பலம் பெற்ற போதிலும் தற்போதைய மத்திய அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. பாஜகவையும், பிற கட்சிகளையும் எவ்வாறு தேர்தலில் தோற்கடிப்பது என்பது குறித்து விரிவாக விவாதித்து வியூகத்தை உருவாக்கி இருக்கிறோம். வரக்கூடிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என்று ராஜஸ்தான் மாநில முக்கிய தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "பணமதிப்பு நீக்கம், தவறான முறையில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்திய< கோவிட்-19 தொற்றின்போது ஏற்படுத்தப்பட்ட திடீர் லாக்டவுன் ஆகியவை இந்தியாவில் உள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த சிறு வணிகங்களில் பெரும்பாலானவை, தங்கள் கைகளால் வேலை செய்பவர்களால் நடத்தப்படுகின்றன. துணி, தோல், உலோகம் மற்றும் மரம் போன்ற மூலப் பொருட்களைக் கொண்ட தொழில்கள் இவை. மோடி அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலரை ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது சந்தித்தார். அதன் பிறகும் அவர், பாதிக்கப்பட்ட மக்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

குறு, சிறு நிறுனங்களை மேற்கொண்டவர்களின் வாழ்வாதாரத்தை பாழ்படுத்தியவர் பிரதமர் மோடி. அவர்களை அழித்த பிறகு, நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களின் கோபம் பிரதமருக்குத் தெரியவந்துள்ளது. அவர்களின் அதிருப்தியை சமாளிக்கவே, விஸ்வகர்மா யோஜனா என்ற மற்றொரு தேர்தல் முழக்கத்தை முன்வைக்கிறார். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர் எதுவும் பேசவில்லை. மும்பையை தளமாகக் கொண்ட தனது நெருங்கிய நண்பரான அதானி, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பில்லியன் டாலர் பொருளாதாரத்தை முழுமையாக கையகப்படுத்துவதற்கு நரேந்திர மோடி தடை போடமாட்டார். பொதுமக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். பிரதமர் ஓய்வு பெறும் நேரம் இது" என தெரிவித்துள்ளார்.

ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், "சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் அது அப்போது நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சட்ட முன்வடிவு தற்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கூட உள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார். இதனிடையே, காங்கிரஸ் எக்ஸ் தளத்தில், "ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது பொதுவான பொறுப்பு, அரசியலமைப்பைப் பாதுகாப்பது நமது உறுதி. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் உறுதியுடன், இலக்கு நிச்சயமாக அடையப்படும். ஜெய் காங்கிரஸ்-விஜய் காங்கிரஸ்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE