“இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு எடுத்த முடிவு இது” - டிவி நிகழ்வு புறக்கணிப்புக்கு தேஜஸ்வி விளக்கம்

By செய்திப்பிரிவு

பாட்னா: பாஜக ஆதரவு நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்ற இண்டியா கூட்டணியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், இந்த முடிவு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பாட்னா திரும்பிய பிஹார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெள்ளிக்கிழமை அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பாஜக ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவு கூட்டணியின் துணைக் குழுவால் எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மத்தியில் ஆளுங்கட்சியை எரிச்சலடையச் செய்துள்ளது போல், சில ஊடகவியலாளர்களிடம் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

பிஹார் கல்வியமைச்சர் சந்திரசேகர ராவின் சர்ச்சைக்குரிய கூற்றுப் பற்றி கருத்து தெரிவித்த தேஜஸ்வி, "என்னைப் பொறுத்தவரையில், தேவையில்லாத சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்த்துவிட்டு அவர் தனது துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற எதிர்மறையான விஷயங்களுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என நான் கருதுகிறேன். சமீபத்தில் மாநில கல்வித் துறை ஆசிரியர் ஆள்சேர்ப்பு இயக்கத்தை நடத்தியது. இதற்கு முன்பு நடந்திராத இதுகுறித்து ஒரு செய்தியை நான் எந்த பிரதானமான ஊடகங்களில் பார்க்கவில்லை.

பிஹாருக்கு வரும் அமித் ஷாவின் வரவு அவருடைய கட்சிக்கு வேண்டுமானால் ஆதாயமாக இருக்கலாம். அதனால் பிஹாருக்கு என்ன பயன் விளையப்போகிறது? அவர் அங்கம் வகிக்கும் அரசு மாநிலத்துக்கு சிறப்பு நிதி தரத் தவறிவிட்டது. சிறப்பு அந்தஸ்து என்று நீண்ட நாட்களாக பேசும் விஷயம் பற்றி என்ன சொல்வது. கிட்டத்தட்ட மத்திய உள்துறை அமைச்சர் ஒவ்வொரு மாதமும் பிஹாருக்கு வருகிறார். உள்நாட்டு போர் போல சூழல் நிலவும் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்வதற்கு அமித் ஷா நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஜி20 விருந்தில் கலந்து கொண்ட பிஹார் முதல்வரை பிரதமர் மோடி வரவேற்றது குறித்து அடுத்த பெரிய திட்டத்துக்கு நிதிஷ் குமார் தயாராகிறார் என்ற ஊடகங்களின் ஊகங்களுக்கு பதில் அளித்த தேஜஸ்வி யாதவ், "அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடக்க வேண்டும் என்று பாஜகவினர் கற்பனை செய்வதால் அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் அவர்கள் அப்படியே செய்யட்டும். அப்போதாவது அவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் சிறிது நிற்கட்டும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE