ஹரியாணா | காங்கிரஸ் எம்எல்ஏ கைது எதிரொலி: நூவில் மொபைல் இணைய சேவை தடை 

By செய்திப்பிரிவு

சண்டீகர்: நூ-வில் காங்கிரஸ் எம்எல்ஏ மம்மது கான்- ஐ போலீஸார் கைது செய்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக நூ-வில் இரண்டு நாட்களுக்கு மொபைல் இணைய சேவையும், மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் தடை செய்யப்படுள்ளது. ஜூலை 31-ம் தேதி நூ-வில் நடந்த வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி போலீஸார் மம்மது கானைக் கைது செய்துள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறுஉத்தரவு வரும் வரை மாவட்ட நிர்வாகம் நூ பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையை வீட்டில் வைத்தே செய்யும்படி இஸ்லாமிய மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இணைய சேவை தடைகுறித்து உள்துறை கூடுதல் செயலர் டிவிஎஸ்என் பிரசாத் வெளியிட்டுள்ள உத்தரவில்,"ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் வண்ணம் செப்.15 காலை 10 மணி முதல் செப்.16 இரவு 11.59 வரைக்கும் இந்த தடையுத்தரவு விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் பதற்றம், கிளர்ச்சி, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம், பொது அமைதி மற்றும் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இணைய சேவைகள் தவறாக பயன்படுத்துவதால் சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ் புக் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் தவறான தகவல்கள், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், தீ வைப்பு,அழித்தொழித்தல் போன்ற வன்முறை செயல்களின் மூலம் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது, கிளர்ச்சியாளர்கள் எளிதாக அணிதிரள்வதை தடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதி மிகுந்த கவனத்துடன் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

காங்கிரஸ் எம்எல்ஏ கைது: முன்னதாக, கடந்த ஜூலை 31ம் தேதி நூவில் நடந்த வன்முறையில் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மது கானை வியாழக்கிழமை இரவு சிறப்பு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கலவர பின்னணி: ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE