உ.பி. நொய்டாவை போல் ஜான்சியில் ஒரு புதிய தொழில்நகரம்: ’பிடா’ எனும் பெயரில் உருவாகிறது

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவை போல் மேலும் ஒரு புதிய தொழில் நகரம் உருவாகிறது. இது, புந்தல்கண்ட் பகுதியான ஜான்சியில், ‘பிடா (பிஐடிஏ- Bundelkhand Industrial Development Authority)’ எனும் பெயரில் அமைக்கப்படுகிறது.

டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ளது நொய்டா. தொழில் நகரமான இது, ’புதிய ஓக்லா தொழில் வளர்ச்சி ஆணையம்’ ((New Okhla Industrial Development Authority) என்பதன் சுருக்கமே நொய்டா. இதற்கான அடித்தளம் கடந்த 1976 ஏப்ரல் 17 இல் அமைக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவும் தற்போது பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

சுமார் 47 வருடங்களுக்கு முன் அமைந்த நொய்டாவை போல் மேலும் ஒரு புதிய தொழில் நகரம் உபியில் அமைய உள்ளது. இதை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், புந்தேல்கண்ட் பகுதியில் அமைக்கிறார்.

உ.பி.,யின் ஒதுக்கப்பட்ட பகுதியான இது, புதிய தொழில் நகரத்தால் அதிக வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் உள்ளது. ஜான்சி-குவாலியர் நெடுஞ்சாலையில் பிடாவை அமைக்க நேற்று முன்தினம், முதல்வர் யோகி அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நொய்டா சுமார் 13,000 ஹெக்டேரில் அமைந்தது. ஆனால், பிடா 14,000 ஹெக்டரில் அமைக்கப்பட உள்ளது. பிடாவின் முதல்கட்டப் பணிகளுக்காக உபி அரசு ரூ.5,000 கோடி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உபி மாநில நிதியமைச்சரான சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, ‘உபியில் இதுவரை இல்லாத வளர்ச்சியை புந்தேல்கண்ட் பகுதி பாஜக ஆட்சியில் பெற்று வருகிறது.
பிடாவிற்காக உபி அரசு அப்பகுதியின் 33 கிராமங்களை கையகப்படுத்த உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.6312 கோடி ஆகும். இது புதிய தொழில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யில் அமையும் புதிய தொழில் நகரத்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன. இதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை பிடாவில் அமைக்கும்படியும் உபி அரசு திட்டமிடுகிறது.

ஜான்சியில் சாலைகள் அதை சுற்றியுள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இதன் நெடுஞ்சாலை ஓரத்தில் புதிய தொழில் நகரம் அமைக்க உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE