பள்ளி சென்ற போது படகு கவிழ்ந்ததில் பிஹார் மாநிலத்தில் 18 குழந்தைகள் மாயம்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் பள்ளிக்கு செல்லும் போது ஆற்றில் படகு கவிழ்ந்ததில், 18 மாணவர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிஹார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தினமும் படகில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி, ஒரு படகில் 34 மாணவர்கள் நேற்று காலை 10.30 மணிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுபூர் பட்டி படித்துறை அருகே ஆற்றில் படகு கவிழ்ந்தது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்கள் ஓடி வந்தனர். ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் சிலரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

முதல்வர் உத்தரவு: இதற்கிடையில், தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதற்குள் 18 மாணவர்கள் ஆற்றில்காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்வர்நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘மாணவர்களை மீட்க மாவட்ட ஆட்சியர், உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படகில்சென்ற மாணவர்களின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்’’ என்று உறுதி அளித்தார்.

ஆற்றில் காணாமல் போன 18 மாணவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE